சென்னை: தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் , அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகள் குறித்த அறிவிப்பு இல்லாதை கண்டித்து, அரசு ஊழியர்கள் சங்கத்தினரான ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் வரும்   24-ம் தேதி மாநிலம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக  சட்டப்பேரவையில்,  2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 20ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில், அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளான பழைய ஓய்வூதிய திட்டம், அரசு துறைகளில் காலியிடங்களை நிரப்புவது, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்த நிலையில், அது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும்  இடம்பெறாததால் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

இதையடத்து, சென்னை  திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைமை அலுவலகத்தி , ஜாக்டோ – ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அ.வின்சென்ட் பால்ராஜ், எம்.பி.முருகையன், எஸ்.நேரு ஆகியோர்  தலைமை வகித்தனர். அனைத்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்து பட்ஜெட்டில் எவ்வித அறிவிப்பும் வெளியிடாதது மிகுந்த ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜாக்டோ ஜியோ உயர்நிலைக் குழு ஏற்கெனவே முடிவு செய்து அறிவித்தபடி மார்ச்24-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் 20 ஆயிரம் கிலோ மீட்டர்அளவிலான மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும்.

அடுத்தகட்ட நடவடிக்கைகளை முடிவு செய்வதற்காக ஏப்.2-ம் தேதி திருச்சியில் உயர்நிலைக்குழு கூட்டத்தை கூட்டுவது என முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் இரா.சண்முகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், சரண்டர் விடுப்பு தொகை உள்ளிட்டவை குறித்து பட்ஜெட்டில் சொல்லப்படாதது அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.