சென்னை: குவாரி உரிமையாளர்களுக்கு  ஆதரவாக தமிழக அரசு, ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைகளை நீக்கி உள்ளது. மேலும்,  காப்புக்காடுகள் எல்லைவரை குவாரிகள் இயங்க அனுமதி வழங்கி உள்ளது. இது குவாரி உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், சுற்றுச்சூழல் சமூகஆர்வலர்கள் தமிழகஅரசின் நடவடிக்கையை விமர்சித்து வருகின்றனர்.

கேரளாவில் மண், பாறைகள் எடுக்க கட்டுபாடுகள்  விதிக்கப்பட்டு, இயற்கை கனிம வளங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில், இதற்கு தடை விதிக்கப்படாத நிலையில், தமிழ்நாட்டில், மண் குவாரிகள், கல் குவாரிகள் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும், மண், கல் போன்றவற்றை வெட்டி எடுத்து விற்று, கல்லா கட்டி வருகின்றன. இதனால், அரசுக்கு சிறு பகுதி வருமானம் கிடைக்கும் நிலையில், குவாரி உரிமையாளர்களோ செல்வச்செழிப்பில் திளைக்கின்றனர். ஆனால், இதுபோனற் செயற்களால் இயற்கை வளங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதுடன், சுற்றுச்சூழலுக்கு ஆபத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

தமிழகஅரசின் இதுபோன்ற நடவடிக்கை காரணமாக,  தமிழ்நாட்டின் அரணாக உள்ள மேற்கு தொடர்ச்சி மலையே காணாமல் போவதுடன், குமரி உள்பட பல்வேறு மாவட்டங்கள் வறட்சி மாவட்டமாக மாறிவிடும் என்றும், வனவிலங்குகள் ஊருக்கும் வரும் நிலை உருவாகும் என சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர். ஆனால்,   அரசியல்வாதிகள் துணையுடன், நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில்  பெருமளவு இயற்ைக வளங்கள் சுரண்டப்பட்டு வருகிறது.

இதன்படி பாதுகாக்கப்பட்ட காப்புகாடு பகுதியில்  இருந்து 10 கி.மீ சுற்றளவிற்கு வனத்துறை கட்டுபாட்டிற்குள் கொண்டு  வரப்பட்டு, இங்கும் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு,  மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி, கடந்த 22.09.2020  அன்று தமிழகம் முழுவதும் 10 கி.மீ என்பதற்கு பதில் 1 முதல் 3 கி.மீ வரை சூழியல் அதிர்வு தாங்கு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, அமலுக்கு வந்தது. அதன்படி, 3 கிலோமீட்டர் தூரத்துக்கு, குவாரிகள், ரசாயனம் மற்றும் ஆபத்தை விளைவிக்கும் தொழில்கள்  செய்ய முடியாது.

தனியார்  காப்புக்காடு என்பது வனத்தில் உள்ள மரங்களை பாதுகாக்க 1946ம் ஆண்டு முதலே உள்ளது. 1949ம் ஆண்டு இதில் திருத்தம் செய்யப்பட்டது. 1979, 1980, 1982,  2002ம்ஆண்டுகளில் மாவட்ட நிர்வாகம் மூலம் 75 அயிரம் முதல் ஒருலட்சம் ஏக்கர் நிலங்கள் தனியார் காப்புக்காடுகளாக இனம் காணப்பட்டன. இந்த சட்டம்  2011ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட போதுதான், நிலத்தை திருமணம் போன்ற அத்தியாவாசிய தேவைகளுக்கு கூட விற்பனை செய்ய முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் கடும் எதிர்ப்பு எழுந்தது. தற்போது, தனியார் காப்புக்காடுகளில்  நிலம் வாங்க, விற்க, மரங்கள் வெட்ட வனத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட மாவட்ட குழுவின் அனுமதி அவசியம். ஆனால், சூழியல் அதிர்வு தாங்கு மண்டலத்தில், இதுபோன்ற பட்டா  நிலத்தில் எந்த உரிமை இழப்பும் கிடையாது. தற்போதைய நிலையே நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது தமிழகஅரசு 3கிலோ மீட்டர் தூரம் வரை அதிர்வு தாங்கும் மண்டலம் என்பதற்கான தடையை நீக்கி உள்ளது. காப்புக்காடுகளின் எல்லை அருகே வரை குவாரிகளை இயங்கலாம் என அனுமதி வழங்கி உள்ளது.

அதாவது,  பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளின் எல்லையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் சுரங்கம் மற்றும் குவாரிகள் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி அறிவித்துள்ளது தமிழகஅரசு. அரசின் வருவாய், குவாரி குத்தகை எடுத்திருப்போரின் நலன்கருதி, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. (இதன்மூலம் இயற்கை வளங்கள் சுரண்ட, தனியார்களுக்கு ஆதரவாக  தமிழகஅரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது)

ஆனால், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள், யானை வழித்தடங்களின் எல்லையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் குவாரிகள் செயல்பட தடை தொடரும் என்றும், காப்புக்காடுகளின் எல்லை அருகே குவாரிகள் இயங்க அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்து உள்ளது.

காப்புக் காடுகள் என்பது என்ன?

இந்தியாவில் காப்புக் காடுகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட காடுகள் (Reserved forests and protected forests of India) இந்தியாவில் மாநில அரசுகளின் வனத்துறையால பாதுகாக்கப்படும் காடுகளைகாப்புக் காடுகள் (Reserved forests) மற்றும் பாதுகாக்கப்பட்ட காடுகள் (Protected forests) என்று அழைக்கப்படுகிறது.

அதிர்வு தாங்கு மண்டலம் என்றால் என்ன?

உச்சநீதிமன்றத்தில் காப்புக்காடுகளை பாதுகாக்க தொடரப்பட்ட வழக்கில், காப்புக்காடுகள் அருகே குவாரிகள் இருந்தால் அங்கு வெடிகள் வைக்கும் போது அதன்  தாக்கம் காப்புகாட்டை பாதிக்கும். இதுபோன்ற அதிர்வுகளை தாங்கும் வகையில், வாகனங்களில் அதிர்வை தாங்க ஸ்பிரிங்க் அமைப்பு இருப்பது போல், அதிர்வை தாங்க காப்புக்காட்டிலிருந்து வருவாய் கிராம பகுதிகளிலும் பாதுகாப்பு அரண் போன்று எல்கை நிர்ணயம் செய்ய உத்தரவிட்டது.

இதன் காரணமாக குவாரிகளில் வெடி வைத்தாலும், அபாயகரமான தொழில் என்றாலும், அது காப்புக்காடுகளை அதன் பாதிப்புகளில் இருந்து தாங்கும். எனவே இது சூழியல் அதிர்வு தாங்கு மண்டலம் என அழைக்கப்படுகிறது.