ஸ்ரீநகர்
காஷ்மீர் ஆங்கிலப் பத்திரிகையான ’கிரேட்டர் காஷ்மீர்’ ஆங்கில நாளேட்டில் பணிபுரியும் பத்திரிகையாளர் இர்ஃபான் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 5 ஆம் தேதி அன்று காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதி எண் 370 விலக்கப்பட்டது. அத்துடன் காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகவும், லடாக் பகுதி மத்திய அரசின் நேரடி கண்காணிப்பின் கீழும் கொண்டு வரப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகரில் இயங்கும் ஆங்கில தினசரியான ‘கிரேட்டர் காஷ்மீர்” அம்மாநிலத்தின் மிகப் பெரிய செய்தித் தாளாகும். இந்த மாநிலத்தில் உள்ள புல்வாமா மவட்ட்ட்டில் உள்ள டிரால் என்னும் பகுதியில் இந்த பத்திரிகையில் பணி புரியும் இர்ஃபான் மாலிக் வசித்து வருகிறார். நேற்று முன் தினம் நள்ளிரவு 11.30 மணிக்கு இவர் வீட்டுக்குள் அதிரடி சோதனை நடத்திய பாதுகாப்புப் படையினர் இவரைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
இர்ஃபானின் தந்தை முகமது அமின் மாலிக் தனது குடும்பத்தினருடன் டிரால் காவல்நிலையத்துக்குச் சென்று மகனை சந்திக்க முயன்றுள்ளார். அப்போது அவரிடம் இர்ஃபான் தம்மைக் கைது செய்த காரணம் குறித்து தெரியவில்லை எனக் கூறி உள்ளார். இர்ஃபான் தந்தை அவரை விடுதலை செய்யுமாறு காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அவர்கள் அதற்கு மறுத்துள்ளனர்.
தற்போது தொலைத் தொடர்பு மாநிலம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இர்ஃபான் குடும்பத்தினர் ஸ்ரீநகருக்கு நேரில் சென்று அவருடைய பத்திரிகை அலுவலகத்துக்குத் தகவல் சொல்ல சென்றுள்ளனர். ஆனால் அந்த அலுவலகம் மூடப்பட்டிருந்தது. அதையொட்டி மாநில அரசின் ஊடக சந்திப்பு மையத்துக்குச் சென்று அங்கு வரும் பத்திரிகையாளர்களிடம் இது குறித்துக் கூறி உள்ளனர்.
அத்துடன் அவர்கள் காஷ்மீர் மாநிலத்தின் அவந்தி போரா பகுதி காவல்துறை சூப்பிரண்ட் தாகிர் சலீமிடம் நடந்ததைத் தெரிவித்துள்ளனர். அவர் இர்ஃபான் கைது குறித்துச் சரியான பதில் ஏதும் அளிக்கவில்லை என இர்ஃபானின் தாய் ஹசீனா தெரிவித்துள்ளார்.
இது குறித்து தாகிர் சலீம் செய்தியாளர்களிடம், “இர்ஃபான் கைது குறித்து எனக்கு எவ்வித தகவலும் இல்லை. என்னை அவர் குடும்பத்தினர் சந்தித்து கைது குறித்துத் தெரிவித்துள்ளனர். நான் இந்த வழக்கின் விவரங்களைக் கோரி உள்ளேன். அது கிடைத்ததும் தெரிவிக்கிறேன்” எனக் கூறி உள்ளார்.
விதி எண் 370 விலக்கிய பிறகு பத்திரிகையாளர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்