சென்னை:
ஜெ.மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் ஜெ. அண்ணன் மகன் தீபக் மீண்டும் ஆஜர் ஆனார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ந்தேதி மரணம் அடைந்தார். அவரது மரணத்தில்பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் 25 ம் தேதி அமைத்தது.
இந்த விசாரணை ஆணையம் இதுவரை 40க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளது. ஜெயலலிதா, சசிகலா தொடர்புடையவர்கள், உறவினர்கள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள், தலைமை செயலாளர்கள், விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஜெயலலிதாவின் உறவினர்கள் தீபக், தீபா, அவரது கணவர் மாதவன், வீட்டு பணியாளர்கள், ஜெயலலிதாவுக்கு செயலாளர்களாக இருந்தவர்கள், வீட்டு வேலைக்கார்கள் என விசாரணையை மேற்கொண்டது. மேலும் சசிகலாவின் வாக்குமூலத்தையும் ஆணையம் பெற்றுள்ளது. மேலும் சசிகலா தரப்பில் குறுக்கு விசாரணையும் நடைபெற்றது.
இந்த நிலையில் விசாரணை ஆணையத்தின் சம்மனை எற்று, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் இன்று மீண்டும் ஆஜரானார்.
அத்துடன் குறுக்கு விசாரணைக்காக ஜெயலலிதாவின் தனிச்செயலராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ராமலிங்கம் மற்றும் சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயனும் ஆஜராகி உள்ளனர்.
சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.