சென்னை:

ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அமைப்பு தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று அவரது அண்ணன் மகள் தீபா ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி நாளை காலை 6 மணிக்கு சென்னை தி.நகரில் பேரவையின் அலுவலகத்தை தீபா திறந்து வைக்கிறார்.

பின்னர் மதுரவாயல் பி.ஹெச் ரோடில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் காலை உணவு வழங்குகிறார். மதியம் 12 மணிக்கு தி.நகரில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்குகிறார். மாலை 5 மணிக்கு பேரவையில் அதிகாரப்பூர்வ பெயரை அறிவித்து, கொடியையும் அறிமுகம் செய்யவுள்ளார்.

இதைத் தொடர்ந்து நிர்வாகிகள் நியமன அறிவிப்பையும் வெளியிடவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து போராடுவேன் என்று தீபா ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தீபாவின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதோடு தீபாவின் அண்ணன் தீபக்கும் தற்போது மன்னார்குடி கூட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். அவரும் பன்னீருக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால் தீபக்கும் தீபாவுடன் இணைந்து செயல்படுவார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.