சென்னை: மறைந்த  ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைககளை வாரிசுதாரரான  தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி உச்சநீதி மன்றத்தில் ஜெ தீபா முறையீடு செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த 1991 முதல் 1996 ம் ஆண்டு கால கட்டத்தில் முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து, ஜெயலலிதாவின் தங்கம் மற்றும் வைர‌ நகைகள், வெள்ளிப் பொருட்கள், கைக் கடிகாரங்கள், பட்டுப்புடவைகள், விலையுயர்ந்த காலணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நடத்தியதால், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அங்குள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டன. இதனிடையே, உடல்நலக் குறைவால் ஜெயலலிதா 2016 ம் ஆண்டு காலமான நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில், அவரது உயிர்த் தோழி சசிகலா உள்ளிட்டோர் சிறை சென்றனர்.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட்டு, அந்த பணத்தை நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் எனக் கோரி சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, கர்நாடக அரசு ஜெயலலிதாவின் நகை உள்ளிட்ட சொத்துகளை ஏலம் விட வழக்கறிஞர் ஒருவரை நியமித்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், பிப்ரவரி 19 ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது கர்நாடக அரசு வசம் உள்ள ஜெயலலிதாவின் பொருட்களை மார்ச் 6 மற்றும் 7 ம் தேதிகளில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டார். அதன்படி பெங்களூருவில் இருந்து 28 கிலோ தங்கம், வைர நகைகள், 800 கிலோ வெள்ளி நகைகள் என மொத்தமாக 6 பெட்டகங்களில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த நிலையில் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை கோரி, ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபா, தீபக் ஆகியோர் கர்நாடகா மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம்,  முதலில் தடை விதித்தது. பின்னர் தொடர் விசாரணைகளை அடுத்து, ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்துடன், தீபா,தீபக் மனுக்களை தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில்,  சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் உள்ளிட்ட பொருட்களை தன்னிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஜெ தீபா சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுஉள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்றம் தீபாவின் கோரிக்கையை நிராகரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபா, தீபக் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்… தீர்ப்பை திருத்தியது சென்னை உயர்நீதிமன்றம்