முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தாததைக் கண்டித்து, மாவட்டத் தலைநகரங்களில் இன்று திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

திருச்சியில் நடந்த போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

“தமிழ்நாட்டைக் காப்பாற்றுவது திமுகவின் கடமை. ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமையத்தான் மக்கள் வாக்கு அளித்தார்கள். தற்போதுள்ள ஆட்சியை மக்கள் விரும்பவில்லை.

இன்று போராட்டம் நடத்துவது, தி.மு.க.வின் சுயநலத்துக்காக இல்லை. மற்ற கட்சியினரும் போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

ஜெயலலிதா மறைந்த பிறகு திமுக நினைத்திருந்தால் தமிழகஆட்சியைக் கலைத்திருக்க முடியும். ஆனால் மக்கள் தேர்தெடுத்த ஆட்சியைத் தான் திமுக நடத்தும்.

ஆனால், தற்போதைய ஆட்சியின் ரிமோட் கண்ட்ரோல் பெங்களூரு சிறையில் உள்ளது. ஒருபோதும் இந்த பினாமி ஆட்சியை ஏற்கமுடியாது.

நாங்கள், திமுகவுக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் போராடுகிறோம்.

ஜெயலலிதா மரணம் குறித்து முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியாகி வருகின்றன. முன்னாள் முதல்வர் . ஓ.பி.எஸ் சொன்னதைப்போல ஜெ மரணம் குறித்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும். அதை அவரே செய்திருக்க வேண்டும்.  அல்லது இப்போது எடப்பாடி பழனிசாமி செய்ய வேண்டும். ஆம்… எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால்,  ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்த  உத்தரவிடட்டும். அப்படி நடத்தினால் பெங்களூரு சிறையில் உள்ளவர்கள் ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்..

இந்த ஆட்சி நீடித்து நிலைக்காது. விரைவில் மக்கள் உங்களைத் தூக்கி வீசுவார்கள். அப்படி தூக்கி எறிந்ததும் திமுக ஆட்சி அமைந்தால் எங்கள் முதல் கையெழுத்து ஜெயலலிதா மரணத்தின் மீதான நீதிவிசாரணைக்காகவே இருக்கும்”என்று முக ஸ்டாலின் பேசினார்.