சென்னை: திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

திமுக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. இந் நிலையில், இன்று  2ம் கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

பேச்சுவார்த்தைக்கு பிறகு அண்ணா அறிவாலயத்தில் காதர் மொய்தீன் கூறியதாவது: கருணாநிதி காலத்திலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்கத்தையும், வரலாற்றையும் மாற்றாமல் திமுக தொகுதிப் பங்கீட்டில் முதல் கையெழுத்து இந்தியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் போடப்பட்டுள்ளது.

இந்தியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கேரளாவில் 30 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். அதுபோல மேற்கு வங்கம், அசாமிலும் போட்டியிடுகிறோம். நாடு முழுவதும் ஏணி சின்னத்தில் போட்டியிடுவதால் தமிழகத்திலும் தனி சின்னமான ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறோம். எந்தெந்தத் தொகுதிகள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறினார்.