டில்லி
மத்திய அரசு இஸ்லாமியர் அல்லாதோர் மட்டும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் எனப் பிறப்பித்துள்ள சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இந்திய முஸ்லிம் லீக் வழக்கு தொடர்ந்துள்ளது,.
பாஜக அரசு கடந்த வருடம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு குடியேறும் இஸ்லாமியர் அல்லாதோருக்குக் குடியுரிமை வழங்க வழி செய்யும் மசோதாவை இயற்றியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதும் மசோதா நிறைவேற்றப்பட்டு அது சட்டமாகியது.
இதனால் நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் வடகிழக்கு மக்கள் பெரிதளவில் பாதிக்கப்படலாம் என ஐயம் எழுந்தது. நாடெங்கும் கடும் போராட்டம் கிளம்பியது. இதையொட்டி மத்திய அரசு இந்த சட்ட நடவடிக்கைகளைச் சிறிது காலத்துக்கு ஒத்தி வைத்தது. இந்நிலையில் கடந்த மே மாதம் 28 ஆம் தேதி மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அதில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வந்து இந்தியாவில் வசிக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் கிறித்துவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மக்கள் அதிகமாகக் குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான், அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் வசித்து வருகின்றனர்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இந்தியன் முஸ்லிம் லீக் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் இந்த வழக்கு முடியும் வரை இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனவும் மத்திய அரசை கேட்டு கொண்டுள்ளது. உச்சநீதிமன்றம் இந்த வழக்கு முடியும் வரை அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட மனுவில் கோரிக்கை இடப்பட்டுள்ளது.