டெல்லி: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது கடந்த 40ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி என விமர்சிக்கப்படுகிறது.

கொரோனா தொற்று பரவல், அதன் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், இந்திய பொருளாதாரமும் கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், நாட்டின் பொருளாதாரம்  கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜிடிபி வீழ்ச்சி அடைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு விடுத்துள்ள அறிக்கையில், தொற்றுநோய்க்கு முன்பு, 2019-20ம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 4 விழுக்காடாக இருந்தது.             அதேசமயம் 2020-21ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 புள்ளி 6 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவுசெய்தது. இந்நிலையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 புள்ளி 3 விழுக்காடாகச் சரிந்துள்ளது.

2020-21ம் நிதியாண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம்  கூறியுள்ளது.

1980-81 க்குப் பிறகு முதன்முறையாக மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும்,    இருப்பினும் நிதியாண்டின் கடைசி காலாண்டான ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் ஜிடிபி 1.6 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில், நடப்பு நிதியாண்டின் முதல் மற்றும் இரண்டாம் காலாண்டிலும் மந்தநிலை தொடரும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்