சென்னை: அரசியல்வாதிகளின் வழக்குகளில் போலீஸ் நிலைப்பாடு அவ்வப்போது மாறுவது துரதிருஷ்டம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆட்சியில் இருக்கும்போது, அமைச்சர்கள் அதிகாரிகள் ஊழல் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதும், வழக்குகள் போடுவதும் வாடிக்கையாக உள்ளது. ஆனால் ஆட்சி மாறும்போது அந்த வழக்குகள் நீர்த்து போக வைக்கப்படுகிறது. இதனால் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தப்பிக்கொள்கின்றனர்.
இதுபோன்ற போக்கு 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிகரித்துள்ளது. ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பல அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டது சர்ச்சையானது. இந்த வழக்குகளை கையாண்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், ஆட்சி மாற்றத்துக்கு பிறகு ஆதாரம் இல்லை, ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணை தவறு என்று கூறுவதால், வழக்கின் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டு வரும் நிகழ்வுகளும் அதிகரித்துள்ளன.
இதனால், கொதிப்படைந்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பல முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்ததுடன், லஞ்ச ஒழிப்புகாவல்துறை பச்சோந்தி போல செயல்படுவதாக கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில், தற்போதும், காவல்துறையினரின் நடவடிகை கடுமையாக விமர்சிக்கப்பட்டு உள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்குகளில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் விடுவிக்கப்பட்டது தொடர்பா வழக்குகள் நேற்று (ஜுன் 11ந்தேதி)எ மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது ஆஜரான, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ”புலன் விசாரணையில் தெரியவராத விவரங்கள் பின்னர் தெரியவரும்போது, அதுகுறித்து மேல் விசாரணை நடத்தலாம். இதன் வாயிலாக, அப்பாவிகள் தண்டிக்கப்படுவது தவிர்க்கப்படும்; உண்மை குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. மேல் விசாரணை நடத்த அனுமதி வழங்குவது மாஜிஸ்திரேட்டின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது,” என்றார்.
குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, ”வழக்குகளில் இருந்து விடுவிக்க கோரி, குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தரப்பில் தாக்கல் செய்த மனுக்கள் மீது, முந்தைய ஆட்சியில் போலீஸ் தரப்பில் வாதங்கள் முன் வைக்க விரும்பாததால், பல ஆண்டுகளாக வழக்குகள் நிலுவையில் இருந்தன. எனவே, இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,” என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஆட்சி மாற்றம் காரணமாக, போலீசாரின் நிலைபாட்டில் மாற்றம் ஏற்படுவது துரதிருஷ்டவசமானது. இது, அரசியல்வாதிகள் சம்பந்தப் பட்ட வழக்குகளில் மட்டுமே நடக்கிறது. வேறு நபர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் நடப்பதில்லை.
முன்னாள் மற்றும் இன்றைய அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டது சரி என முடிவுக்கு வந்து, தானாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட இந்த வழக்குகளை, ஒரு வேளை முடித்து வைத்தாலும் கூட, இந்த வழக்குகளின் விசாரணையின்போது நடந்த முறைகேடுகள் குறித்து எவரேனும், எப்போதாவது கேள்வி எழுப்புவர் என்ற செய்தியை சொல்லவே, இந்த வழக்குகளை விசாரணைக்கு, இந்த நீதிமன்றம் எடுத்து கொண்டது’ என தெரிவித்த நீதிபதி, பதில் வாதங்களுக்காக விசாரணையை வரும், 13ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.