டில்லியில் தி வயிட் டைகர் திரைப்படத்தின் ஷூட்டிங் பணிக்காக அங்கு சென்றுள்ள நடிகை ப்ரியங்கா சோப்ரா, அங்குள்ள காற்று மாசுபாடு குறித்த தனது கருத்துக்களை தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று ஒரு செல்பி பதிவிட்டுள்ள ப்ரியங்கா சோப்ரா, அதில் காற்று மாசுபாட்டிற்காக மாஸ்க் ஒன்றையும் அணிந்திருந்தார். அப்படத்திற்கு கீழ், ”தி வயிட் டைகர் திரைப்படத்திற்கான ஷூட்டிங் நாட்கள். இங்கு ஷூட்டிங் நடத்துவதே மிகக்கடினமாக இருக்கிறது. இங்கு வாழ்வதை நினைத்துக்கூட பார்க்க முடியாத சூழல் நிலவுகிறது. காற்று சுத்திகரிப்பு மற்றும் மாஸ்க் தான் எங்களை காப்பாற்றி வருகிறது. வீடுகள் இல்லாமல் இதுபோன்ற பாதிப்புகளில் நேரடியாக பாதிக்கப்படுவோருக்காக வேண்டிக்கொள்வோம். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

டில்லியில் கடந்த சில நாட்களாகவே கடும் காற்று மாசு நிலவி வருகிறது. கடந்த மூன்றாடுகளில் இல்லாத அளவுக்கு நேற்று கடுமையாக காற்று மாசுபட்டதால், பலரும் சமூகவலைதளத்தில் தாங்கள் நகரத்தை விட்டு செல்ல விரும்பவதாக எல்லாம் தெரிவித்திருந்தனர். அரவிந்த் அடிகாவின் நாவல் ஒன்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் தி வயிட் டைகர் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தை ராமின் பஹ்ரனி இயக்குவதோடு, திரைக்கதையையும் அவரே எழுதியுமுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.