மும்பை
நிலம் கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் நேற்று அடிக்கல் நாட்டப்பட்ட மும்பை – அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டம் 2022ல் முடிவடைவது சந்தேகம் என ஒரு தகவல் தெரிவிக்கிறது.
மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரெயில் திட்டத்துக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் மும்பையின் வியாபார ஏரியா மேலும் விரிவாக்கப்பட்டுள்ளதாக மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் இதன் மூலம் வேலைவாய்ப்பு போன்றவைகளும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. வரும் 2022ஆம் ஆண்டு இந்த திட்டம் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புல்லட் ரெயில் திட்டத்தில் 11 நிலையங்கள் அமைய உள்ளது. 21 கிமீ தூரம் பூமிக்கு அடியிலும், அதில் 7 கிமீ கடலுக்கு அடியிலும் பயணம் செய்யும் இந்த ரெயிலின் 92% மேம்பாலத்திலும், 6% பூமிக்கு அடியிலும் வரும். ஆனால் மீதமுள்ள நிலத்தை இதுவரை கையகப்படுத்தவில்லை.
இதுவரை கிடைத்த தகவலின் படி குஜராத்தில் எட்டு மாவட்டங்களில் உள்ள 163 கிராமங்களிலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 44 கிராமங்களிலும் நிலங்கள் கையகப்படுத்த உள்ளன. இதனால் 2761 குடும்பங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிய வருகிறது. இதனால் நிலத்தை தர மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பேசச் சென்ற ரெயில்வே அதிகாரிகள் மக்களால் திருப்பு அனுப்பப் பட்டுள்ளனர். பல சமூக தன்னார்வு தொண்டு நிறுவனங்களும் அந்த மக்களுக்கு ஆதரவு அளித்துள்ளன.
தொண்டு ஆர்வலர் ஒருவர், “நாங்கள் நாட்டின் முன்னேற்றத்தை எதிர்க்கவில்லை. ஆனால் அது ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடாது என எதிர்க்கிறோம். ஏற்கனவே சாலைகளுக்காகவும், தொழிற்சாலைகளுக்காகவும் நிலங்களை இழந்த எங்களுக்கு இது மேலும் பேரிடியாகும்” என கூறி உள்ளார். அது மட்டுமின்றி கையகப்படுத்த வேண்டிய நிலங்களில் பெரும்பாலானவை விவசாய நிலங்களாக இருப்பதால் பல விவசாய சங்கங்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
பா ஜ க அரசு விவசாயிகளுக்கு எதிராகவே எப்போதும் உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீதிபதியும், மக்கள் சமூக உரிமை சங்கத்தின் முன்னாள் தலைவருமான ராஜிந்தர் சச்சார் இந்த புல்லட் ரெயில் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “மோடியின் இந்த புல்லட் ரெயில் திட்டம் நமது ஏழை நாட்டுக்கு தேவையற்ற ஒன்று. பல அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் எதிர்க்கும் இந்த நிலையில் இந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதே தவறு.” என அவர் கூறி உள்ளார்.
இவ்வளவு எதிர்ப்பு இருப்பாதாலும், மேலும் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் உண்டாவதாலும் இந்த திட்டம் குறிப்பிட்டபடி 2022ல் முடிவடைவது சந்தேகம் எனவும் விரைவில் அது வேறு ஒரு தேதிக்கு நீட்டிக்கப்படும் எனவும் ஒரு தகவல் கூறுகிறது.