சென்னை:

மிழகத்தில் லோக்ஆயுக்தா அமைப்பது தொடர்பான சட்டம் இயற்றப்பட்டு ஓராண்டை கடந்தும், அதற்கான பணிகள் தொடங்காமல் முடங்கிப்போய் உள்ளது. இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர், அமைச்சர்கள் உள்பட  மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தா கொண்டு வரும் வகையில் லோக்பால் சட்டம் ஏற்கனவே மத்திய அரசால்  அமல்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து மாநிலந்தோறும் லோக் ஆயுக்தா நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டு வருகிறது.

தமிழக சட்டமன்றத்தில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா கடந்த ஆண்டு (2018) ஜூலை 9ந்தேதி அன்று  நிறைவேறியது. இந்தியாவில் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றி உள்ள 18வது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

அதைத்தொடர்ந்து, 2018ம் ஆண்டு நவம்பர் 29ந்தேதி, லோக் ஆயுக்தா பணிகள் தொடங்கி விட்ட தாக  தமிழக அரசு அறிவிப்பானை வெளியிட்டது. அதன்படி,  லோக் ஆயுக்தா உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில், சட்டமன்ற சபாநாயகர், முதல்வர்  எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இடம் பெறுவர். இவர்களை இணைந்து லோக்ஆயுக்தா உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆனால், தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள லோக்ஆயுக்தா அமைப்பானது, பல்லும் இல்லாத, பவரும் இல்லாத , அச்சடித்த பதுமை போன்றுள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.

லோக்ஆயுக்தா தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ். உறுப்பினர்களாக  ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜெயபாலன், கிருஷ்ணமூர்த்தியும், சட்டத் துறையை சேராத உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராமும், ஆறுமுகம் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

லோக்ஆயுக்தா நீதிபதியின் வீடு முகப்பேர் அருகே உள்ள நொலம்பூரில் உள்ளது. இந்த இல்லத்தின் தரைதளத்தில் தற்காலிகமாக அலுவலகம் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அங்கு ஒருசிலர் மட்டுமே அலுவலகத்துக்கு வரும் நிலையில், லோக்ஆயுக்தா நீதிபதியோ, அதன் உறுப்பினர்களோ வருவது இல்லை என்று கூறப்படுகிறது.

லோக்ஆயுக்தா அமைப்பு மற்றும் அதன் அலுவலர் தொடர்பான பணிகளுக்கு செயலாளர் முதல் இயக்குனர், கணினி ஆய்வாளர் பிரிவு அதிகாரி, மேலாளர் பதிவு எழுத்தர்கள் வரை  103 பேர் வரை நியமிக்கலாம் என்று ஆணை உள்ள நிலையில் புதிதாக நியமிக்கப்படுவர்கள் பணி செய்ய ஏதுவான கட்டிடம் தேடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

நிரந்தர கட்டிடத்திற்குச் செல்ல எவ்வளவு காலம் ஆகும் என்பது குறித்து சரியான தகவல் இல்லாத நிலையில், தற்காலிகமாக   கிண்டியில் உள்ள சிட்கோ தொழில்துறை தோட்டத்திற்கு அரசு கட்டடத்தின் இரண்டு தளங்கள் வாடகைக்கு விடப்படும் என்றும்,நகர எல்லைப் பகுதியில், லோக்ஆயுக்தா நிரந்தர கட்டிடம் அமைக்க  ரூ .6 கோடி செலவில் பணிகளை மேற்கொள்ள அரசு விரைவில் உத்தரவு பிறப்பிக்கும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.

ஆனால், இதுதொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதால், லோக்ஆயுக்தா செயல்படுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

தமிழக அரசின் ஆர்வமின்மையை இது காட்டுவதாகவும், ஊழல் அச்சுறுத்தலுக்கு தீர்வு காண அரசாங்கம் விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்துவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதற்கிடையில் தமிழக லோக்ஆயுக்தா தலைவர் நீதிபதி தேவதாஸ் சமீபத்தில் கேரளா மற்றும் கர்நாடக லோக் ஆயுக்தாவுக்கு  விஜயம் செய்ததாகவும், அங்கு நடைபெறும் செயல்பாடுகள் மற்றும், ஒம்புட்ஸ்மனிடம் இருந்து சில குறிப்புகள் பெறப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், விரைவாக நடவடிக்கை எடுக்க பலமுறை அரசுக்கு நினைவூட்டியூம், அனைத்தும் கிணற்றில் போட்ட கல்லாகவே இருபபதாக அதிகாரி ஒருவர் ஆதங்கப்பட்டுள்ளார்.

லோக்ஆயுக்தா அமைக்கப்பட்டால், முதல்வர் முதற்கொண்டு, முன்னாள் முதல்வர், அமைச்சர், முன்னாள் அமைச்சர், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், மாநில அரசு ஊழியர்கள், அரசால் நிர்வகிக்கப்படும் அல்லது அரசின் நிதி பெறும் அமைப்புகள் அல்லது வாரியங்கள் அல்லது சங்கங்கள் அல்லது தன்னாட்சி அமைப்புகளில் நடைபெறும் ஊழல்கள் வெளிப்பட வாய்ப்பு ஏற்படும்.

இன்னும் ஒன்றரை  ஆண்டில் (2021)  தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது லோக்ஆயுக்தா மூலம் அமைச்சர்கள் மீது புகார் பதியப்பட்டால், அது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்னும் நோக்கத்திலேயே அதிமுக அரசு, லோக்ஆயுக்தா செயல்படுவதை தாமதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஆனால், சமூக ஆர்வலர்களோ,  லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டு ஓராண்டை கடந்து விட்ட நிலையிலும், அதற்கான சுவரே தெரியாத வகையில்,  செயல்பட முடியாத நிலையில் கோமா நிலையில் இருப்பதாக கண்டித்து உள்ளனர். லோக்ஆயுக்தா எப்போது உயிர்பெறும் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.