நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி! கவிஞர் கண்ணதான் பிறந்த நாள்…

“பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் இருந்தால்அதுதான் தெய்வத்தின் சன்னிதி அதுதான் காதலின் சன்னிதி..”
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அணைப்பைவிட, ஆனந்தத்தில் அழுது தீர்ப்பது தான் இயல்பாக இருக்கும் என்பதை கண்ணதாசனைத் தவிர வேறு யாரால் சொல்ல முடியும்.
“தொட்டு விளையாடினால்..”
அடுத்த வரி சொல்லுப்பா
“தொட்டில் வரை போகலாம்”
இரண்டே வரியில் ஓப்பனிங் குளோசிங் டோட்டலா மேட்டர் ஓவர்.
நம்ம கவிஞர் டைப்பே தனி ரகம்.. அடி துவம்சம்தான். சுத்திவளைச்சும் கேப்பாரு. பளார்ன்னு பொட்டுல அறைஞ்சா மாதிரியும் கேப்பாரு. ஆனா நச் நச்சுனு இருக்கும்.. காதலையும் பெண்மையையும் நக்கல் பார்வையோடு உரசுபவனை ‘வாழ்க்கை படகு’ படத்தில், பெண்ணை விட்டே சுற்றிவளைத்து இழுத்து வந்து வெளுக்கச்செய்வார் கவிஞர்
காதலித்தல் பாபமென்றால்
கண்களும் பாபமன்றோ?
கண்களே பாபமென்றால்
பெண்மையும் பாபமன்றோ?
பெண்மையே பாபமென்றால்,
மன்னவரின் தாய் யாரோ?…
இதன் அர்த்தம் என்ன? “போடா மூடிக்கிட்டு” என்று அர்த்தம். பெண்ணென்னும் மாய பிசாசு என்று பாடித்திரிந்த சித்தர்களுக்கும் சேர்த்து கண்ணதாசன் பிராண்ட் விபூதி அடி..
அதேபோல காமத்தை பழிப்பவனை நவராத்திரி படத்தில் வரும், “இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்” பாட்டில் ஒரே போடுபோட்டு காலி பண்ணுவார்.
“பாவம் என்றால்
ஒரு ஆணையும் பெண்ணையும்
இறைவன் படைப்பானா,
பாதைபோகும் வழியில்
திராட்சை கொடியை வளர்ப்பானா?”
இதைவிட தன்னையே நொந்து கொண்டு வாழ்க்கையின் உச்சகட்ட சலிப்பை எட்டியவனை, தப்புத்தாளங்கள் படத்தில் ஒரே சீவில் சொல்லிவிட்டு போய் கொண்டே இருப்பார் கண்ணதாசன்…
“யாரை நெனச்சி பெத்தாளோ அம்மா, அட
போகும் இடம் ஒன்னுதான் விடுங்கடா சும்மா
இதுக்குபோய் அலட்டிக்கலாமா?”

யாருடைய வித்துன்னு டிஎன்ஏ டெஸ்ட்லகூட கண்டுபிடிச்சிடலாம். ஆனா அந்த நேரத்துல யாரை நெனச்சாங்கன்னு எந்த விஞ்ஞானத்தால கண்டுபிடிக்கமுடியும்?
இப்படி எளிமையாக கவிதை படைக்கும் அவரே மண்டையை உலுக்கினால்தான் புரியும் அளவுக்கு சூட்சுமாக வரிகளை கட்டமைப்பதிலும் அவ்வளவு கில்லாடி.
எம்ஜிஆரின் பறக்கும் பாவை படத்தில் அந்த டைப்பில் ஒரு வர்ணனையை வைத்திருப்பார்.
நிலவென்னும் ஆடைகொண்டாளோ
அவள் தன் நிழலுடன் நின்றாளோ
குளிரென்னும் வாடைகொண்டாளோ
அவள் தன்கூந்தலில் மறைந்தாளோ..
அலங்காரமோ ஆடையோ சூடாத பெண்ணின் முழு நிர்வாண இயல்பழகை இதைவிட எப்படி விவரிக்கமுடியும்?
ராமாயணத்தை ரெண்டே வரியில் சொல்லனுமா?
“கோடு போட்டு நிற்க சொன்னால்
சீதை நிற்கவில்லையே
சீதை அங்கு நின்றிருந்தால்
ராமன் கதை இல்லையே
அவங்கள இவங்கள படிக்குறதுக்கு முன்னாடி முதல்ல உங்கள படிங்கடான்னு
தோழர் கண்ணதாசன் சொன்னதுதான் வேட்டைக்காரன் படத்தில் வரும்
“உன்னை அறிந்தால்…
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்”ன்ற வரிகள்
சொல்லிக்கிட்டே போனா அது பாட்டு போய்கிட்டே இருக்கும் அதனால கடைசியா இந்த விஷயம்.
“ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா இருவரின் துடிப்பினிலே விளைவது மழையடா”
ஆண்மை, பெண்மை, கலவி, வம்ச விருத்தி..
எல்லா விஷயமும் இரண்டே வரியில ஓவர்

“என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டே தவிர, நம்பிக் கெட்டவர்கள் இன்றுவரை இல்லை” – மக்கள் திலகத்தின் திரைப்பட வரலாற்றில் அவருக்கு நம்பர் ஒன் மாஸ் வசனம் இதுதான்.
எம்ஜிஆர் முதன்முதலாக இரட்டை வேடங்களில் நடித்து தயாரித்து இயக்கிய நாடோடி மன்னன் (1958) படத்தில் இதனை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்..
“சொன்னாலும் புரிவதில்லை மண்ணாளும் வித்தைகள்”
“நீங்கள் மாளிகையில் இருந்து மக்களைப் பார்க்கிறீர்கள். நான் மக்களிலிருந்து மாளிகையை பார்க்கிறவன்”
” இருளை போக்கும் விளக்கிற்கு, தன் நிழலைப்போக்கும் சக்தி இல்லை”
“சாதிக்கமுடியாத சாதனைகளெல்லாம் சோகத்தால் துவண்டு போனவர்கள் செய்துமுடித்தவைதான் வீராங்கா..”
“சந்தர்ப்பத்தின் துணை இருந்தால் தான் எந்தவித திறமைக்குமே பெயர் உண்டு”
நாடோடி மன்னனில் வசனகர்த்தாவாக புகுந்து விளையாடிய கவியரசு கண்ணதாசனுக்கும் எம்ஜிஆருக்கும் இடையே ஒரு அற்புதமான வெற்றி கூட்டணி இருந்தது.
தமிழ் சினிமா உலகில் ஏகப்பட்ட தியேட்டர்களில் 100 நாள் என வெற்றிக்கொடி நாட்டி ஒரு கோடி ரூபாயை முதன் முதலில் வசூலித்த திரைப்படம் மதுரை வீரன். படத்திற்கு வசனகர்த்தா கண்ணதாசன்.
“அவனைப் பின் தொடர்ந்து சென்றேன். ஆனால் அவன் என்னை முன் முந்தி சென்று விட்டான்” — மதுரை வீரனில் பாலையாவுக்காக எழுதிய நக்கலான டயலாக்..
அரச கதைகளில் மட்டுமே நடிப்பது என்று இருந்த எம்ஜிஆருக்கு முதன் முதலில் சமூக படமாக பெரும் வெற்றியை தேடிக் கொடுத்த படம், திருடாதே.. இதற்கும் வசனம் கண்ணதாசன்தான்..
“அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரண தேவி” என்ற வசனத்தை சொல்லாமல் இங்கு கண்ணதாசனை கடக்க முடியுமா?
கண்ணதாசன் எழுதி சாகா வரம் பெற்ற,”அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா” பாடல் இடம்பெற்ற
மன்னாதி மன்னன் படத்தில், தாயைப் பழித்தவனை நோக்கி எம்ஜிஆர் வாயால் சீறும் வசனங்களை மறக்க முடியுமா?
அடேய் கண்ணதாசா, பிறந்தநாள் வாழ்த்துடா..