ரோம்

செலவுக் குறைப்புக்காக இத்தாலி நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளது.

இத்தாலி நாட்டின் நாடாளுமன்ற கீழவையில் 630 பேர் உள்ளனர்.  மேலவையில் 315 பேர் உள்ளனர்.   ஒரு வருடத்துக்கு ஒரு கீழவை உறுப்பினருக்கு 230000 யூரோக்களும் மேலவை உறுப்பினருக்கு 249,600 யூரோக்களும் செலவிடப்படுகிறது.   இந்த செலவைக் குறைக்க இத்தாலி அரசு முடிவு செய்தது.  அதையொட்டி இத்தாலி நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்களைக் குறைக்கத் தீர்மானம் இயற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின் படி கீழவை உறுப்பினர்கள் 630லிருந்து 400 ஆகவும் மேலவை உறுப்பினர்கள் 315லிருந்து 200 ஆகவும் குறைக்கப்பட உள்ளது  இதற்கான வாக்கெடுப்பில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் தீர்மானம் நிறைவேறி உள்ளது.    இதன் மூலம் வருடத்துக்கு 89.7 மில்லியன் யூரோக்கள் மிச்சமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இத்தாலி நாட்டு அரசியல் விமர்சகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.   இது ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தும் வகையில் அமைந்துள்ள ஒரு செயல் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.  ஆனால் ஆளும் ஃபைவ் ஸ்டார் இயக்கம் இந்த முடிவு கடந்த 30 ஆண்டுகளாக முயன்று தற்போது நிறைவேறி உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.