சென்னை:
அதிமுக ஆட்சியை நிலைநிறுத்தியது பாஜக தான் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ புகழாரம் சூட்டியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், “இந்திரா காந்திக்கு பின்னர் மாற்றத்தை தருவதற்கு பிரதமர் மோடியை தவிர வேறு யாருமில்லை. அவரால்தான் உலக நாடுகளின் பார்வையில் இந்தியாவின் வளர்ச்சி தெரிந்து, நம் நாடு வல்லரசை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதற்கு நாடாளுமன்றத் தேர்தலை சாட்சி. மக்கள் விரும்புகின்ற ஆட்சியை தந்த காரணத்தால் தான் மீண்டும் மத்தியில் பா.ஜக ஆட்சிக்கு வந்தது.
தமிழகத்தில் திமுகவினால் ஒரு விஷ விதை விதைக்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வேரூன்றி உள்ளதை கண்கூடாக பார்க்கிறோம். பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சி இருந்தாலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நல்லாட்சி தந்துள்ளது என்று பிரதமர் மோடி நற்சான்றிதழ் வழங்கி உள்ளார். அதிமுக ஆட்சிக்கு சில சூழ்நிலைகளால் பாதிப்பு ஏற்பட்டாலும், அதிமுக ஆட்சியை நிலைநிறுத்தி. மீண்டும் அதிமுக ஆட்சிதான் அமையும் நிலை உருவாக்கியதற்கு முழு காரணம் மத்திய பா.ஜ.க அரசுதான். இதனை முதல்வரும் வெளிப்படையாக சொல்லி உள்ளார். நாங்களும் சொல்கிறோம். மத்திய மாநில அரசு இணக்கமாக இருந்தால் தான் வளர்ச்சிப் பணிகள் நடைபெறும்.
ஒரு ரயில் ஒழுங்காக ஓட வேண்டுமென்றால் இரண்டு தண்டவாளம் வேண்டும். இரண்டு தண்டவாளமும் இணைந்து இருந்தால்தான் ரயில் ஓடும். மத்திய அரசு ஒரு பக்கம், மாநில அரசு ஒரு பக்கம் இருந்தால் வளர்ச்சி பணிகள் பாதிக்கும். கொள்கை என்பது வேறு, கூட்டணி என்பது வேறு. வரும் தேர்தல் ஒரு தர்மயுத்தம். தீயசக்தி திமுக வரக்கூடாது என்பதற்காக அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து கொண்டிருக்கிறோம். திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப ஆட்சி நடக்கும், ஆனால் அதிமுகவை பொறுத்தவரை சாமானியனும் முதல்வராக முடியும் என்ற வரலாறு உண்டு. குடும்ப ஆட்சி வரக்கூடாது என்ற உணர்வு மக்களிடையே உள்ளது.மக்களுக்கு தேவையான திட்டங்களை தந்து குறை சொல்ல முடியாத ஆட்சியாக அதிமுக ஆட்சி உள்ளது. தேர்தல் பிரசார யுக்த்தியை பாஜக நாங்கள் சொல்லித்தர வேண்டியதில்லை, பாஜக விடம் இருந்து நாங்கள் படித்துக் கொண்டிருக்கிறோம்.
கொரோனா தடை உத்தரவு இருந்தாலும் வேல் யாத்திரையை நடத்தி காட்டி, மக்களின் கவனத்தை ஈர்த்து வளர்ச்சிப்பாதையில் பாரதிய ஜனதா கட்சி வந்திருக்கிறது. வரும் தேர்தல்களம் அதிமுக – திமுக இடையை மட்டும்தான். மூன்றாவது அணி என்பது அவர்களுக்குள் வேண்டுமென்றால் போட்டி போட்டுக் கொள்ளலாம். பாம்பின் கால் பாம்பறியும் என்பதற்கிணங்க அவர்கள் களத்திற்கு வரும்போது பார்த்துக் கொள்வோம்.
தனிப்பட்ட விமர்சனம் வேண்டாம் என்பது என்னுடைய கருத்து, அதற்காகத்தான் எந்த இடத்திலும் பெயரைக்கூட நான் சொல்லவில்லை. சொல்லப் போவதுமில்லை. செய்த சாதனைகள் சொன்னால் மட்டும் போதும் , வேட்பாளர் யார் என்று கடுகளவும் யோசிக்க வேண்டாம், தமிழகம் முழுவதும் அதிமுக பாஜக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். கோவில்பட்டி தொகுதியில் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” என்றார்.