தேனி:

தேனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிப்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் ரூ.1.48 கோடி பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக  அமமுகவினா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வாக்காளர் களுக்கு பணம் கொடுத்து வாக்கை விலைபேசும் நிகழ்வு ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் பல இடங்களில் நடைபெற்ற ரெய்டில் ஏராளமான பணம் கைப்பற்றப்பட்ட நிலையில், வேலூரில் கைப்பற்றப்பட்ட ரெய்டை தொடர்ந்து அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் வாக்காளா்களுக்கு விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.1.48 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க ஏராளமான பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, வருமான வரித்துறை அதிகாாிகள் அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது டிடிவி அணியை சேர்ந்த சிலர் அதிகாரிகளை தடுத்ததால், பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்துக்கு வந்த துணை ராணுவத்தினர வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, கட்சியினரை விரட்டியடித்தனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற சோதனையில், வாக்காளர்களுக்கு கொடுக்க, வார்டு வாரியாக பிரித்து வைக்கப்பட்டிருந்த சுமார்   ரூ.1.48 கோடியை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக அமமுகவினா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து அந்த அலுவலகத்தில் விடிய விடிய சுமாா் 9 மணி நேரம் வருமான வரித்துறையினா் சோதனை நடத்தினா். மேலும் அமமுக நிா்வாகிக்கு சொந்தமான கடையிலும் சோதனை நடத்தப்பட்டது.

அமமுக நிா்வாகிக்குச் சொந்தமான கடையில் இருந்து ரூ.1.48 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாாிகள் தொிவித்துள்ளனா். வாக்காளா்களுக்கு ரூ.300 வீதம் விநியோகம் செய்யப்படுவதற்காக பணம் வைக்கப்பட்டிருந்ததாக அதிகாாிகள் தொிவித்துள்ளனா்.

இது தொடா்பாக காவல்துறையினா் அமமுகவைச் சோ்ந்த 7 போ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்.