திருச்சி:
பெரம்பலூர் அருகே வாகன சோதனையின்போது, காரின் கதவுகளுக்கு இடையே வைத்து கடத்தி வந்த விசிக பிரமுகர்கள் மற்றும் ரூ.2கோடி பறிமுதல் எதிரொலியாக, திருச்சி விசிக பிரமுகர் ராஜா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல், 18 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்காக நாட்கள் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பறக்கும் படையினரும் அதிரடியாக இரவு பகல் பாராது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிலும் அவரது நண்பர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் துரைமுருகனின் நண்பருக்கு சொந்தமான குடோனில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், இன்று திருச்சி மன்னார்புரத்தில் விசிக நிர்வாகி ராஜாவுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருச்சி கே.கே நகர் கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்தவர் ராஜா என்ற அழகர்சாமி (45). விசிக வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக இருந்து வருகிறார்.
இன்று காலை காரில் கடத்தப்பட்ட சுமார் ரூ.2 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் எதிரொலியாக திருச்சி விசிக பிரமுகர் ராஜாவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ராஜாவுக்கு எல்பின் என்ற சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது, நிலம் வாங்கி தருவதில் மோசடி என்ற புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது.