வேலூர்: வேலூர் மாவட்ட திமுக பிரமுகர் அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் நேற்று இரவு திடீர் சோதனை மேற்கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் நா. அசோகன். இவர், வேலூர் மாநகர மாவட்ட திமுக பொருளாளராகவும், இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவராகவும் உள்ளார். இவர் அரசு ஒப்பந்ததாரராகவும், தோட்டப்பாளையம் பகுதியில் பிரின்டிங் பிரஸ் வைத்தும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், நேற்றிரவு சுமார் 7 மணி அளவில் வேலூரை சேர்ந்த கூடுதல் கமிஷனர் பூரணசந்தர் தலைமையிலான நான்கு பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திமுக நிர்வாகி அசோகனுக்கு சொந்தமான தோட்டப்பாளையம் டிபி கிருஷ்ணசாமி நகர் பகுதியில் உள்ள பிரிண்டிங் பிரஸ் அலுவலகத்தில் காவல் துறை பாதுகாப்புடன் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது அலுவலக ஊழியர்கள் மற்றும் அசோகனின் மகன் அரவிந்தன் இருந்துள்ளனர். பணம் ஏதேனும் இருக்கிறதா என சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், பணம் எதுவும் இல்லாத நிலையில் வங்கி தொடர்பான ஆவணங்களை கணினி மூலம் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர். சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர். இதில் பிரின்டிங் பிரஸ்சின் வங்கி தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி சம்மன் வழங்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக திமுக நிர்வாகி அசோகனின் மகன் அரவிந்தன் கூறுகையில், முதலில் பணம் ஏதேனும் இருக்கிறதா என்று சோதனையிட்டார்கள், பணம் எதுவும் கிடைக்காத நிலையில் வங்கி ஆவணங்களை மட்டும் சரிபார்த்து சென்றார்கள் எனக் கூறினார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதாக வந்த புகாரின்பேரில் வருமான வரித்துறையினர் துரைமுரகன், அவரது மகன் கதிர்ஆனந்த் மற்றும் பலரதுவீடுகளில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
எனக்கு சொந்தமான இடங்களில் தங்கம், பணம் கைப்பற்றியதை நிரூபித்தால் பதவி விலக தயார்! துரைமுருகன்