சென்னை:

மிழகத்தில் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த குடிநீர் ஆலைகளை மூடி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஆலைகளுக்கு சீல் வைக்கும் பணி தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், இன்று தமிழகஅரசு சார்பில், நீதிமன்றத்தில், அனுமதியின்றி செயல்பட்ட குடிநீர் ஆலைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட மனு மீது விசாரணை நடத்தி  உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அமர்வு, சட்டவிரோத நிலத்தடி நீரை உறிஞ்சும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, அது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அப்படி அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படும் என எச்சரித்திருந்தனர்.

இந்த வழக்குவில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட வாரியாக அமைந்துள்ள குடிநீர் உற்பத்தி ஆலைகள் குறித்த பட்டியலை தமிழக அரசு தாக்கல் செய்தது. அதில், உரிமம் பெறாமல் செயல்படக்கூடியஆலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. மொத்தம் 552 குடிநீர் ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின்போது, குடிநீர் தட்டுப்பாடு, கேன் உரிமையாளர்களின் காலவரையற்ற போராட்டம் குறித்து வாதங்கள் நடைபெற்றன.

இதையடுத்து, குடிநீர் ஆலைகள் போராட்டம் குறித்து நீதிபதிகள் கடும் எச்சரிக்கை செய்தனர்.  “போராட்டம் மூலம் அரசுக்கும், நீதிமன்றத்துக்கு நெருக்கடி கொடுக்கலாம் என நினைப்பது தவறு, நிலத்தடியில் இருந்து நீர் எடுக்கும் அளவிற்கு ஏற்ப ஏன் கட்டணம் வசூலிக்க கூடாது? என்றும் கேள்வி விடுத்தனர்.

இயற்கை வளமான தண்ணீரை இலவசமாக எடுக்க அனுமதிப்பது ஆச்சரியம் என்று கூறிய நீதிபதிகள்,  மூடப்பட்ட ஆலைகளை தற்காலிகமாக இயங்க அனுமதிப்பது தொடர்பாக நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.