மகாராஷ்டிர மாநிலம் புனே-வில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சீரம் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனாவாலா, தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாகவே இரண்டு டோஸ் தடுப்பூசிகளுக்கு இடையிலான கால இடைவெளியை மத்திய அரசு அதிகரித்திருக்கிறது என்று கூறினார்.
லோக்மான்ய திலக் அறக்கட்டளை சார்பாக 2021 ம் ஆண்டுக்கான தேசிய லோகமான்ய திலக் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு விருதைப் பெற்றுக் கொண்ட சைரஸ் பூனாவாலா அந்த நிகழ்ச்சியில் பேசியதாவது :
முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான கால இடைவெளி இரண்டு மாதம் தான்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த கால இடைவெளியை அதிகரிக்க முடியும்.
தடுப்பூசிக்கான தட்டுப்பாடு அதிகரித்திருப்பதன் காரணமாகவே மத்திய அரசு இந்த கால இடைவெளியை கோவிஷீல்டு-க்கு 3 முதல் 4 மாதங்களாகவும் கோவாக்சினுக்கு 4 முதல் 6 வாரங்களாகவும் அதிகரித்திருக்கிறது.
சீரம் நிறுவனம் மாதம் ஒன்றுக்கு சுமார் 10 முதல் 12 கோடி டோஸ் தடுப்பூசி தயாரிப்பதாகவும், வேறு ஒரு நிறுவனம் மாதத்திற்கு 1 கோடி டோஸ் தயாரிப்பதாகவும் கூறிய அவர் “2021 ம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று” என்று கூறினார்.
மேலும், “இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று கூறுவதை நம்பாதீர்கள்” என்றும் கூறினார்.
வேறு நோய்களுக்கான மருந்து தயாரிப்பதைக் குறைத்துக் கொண்டு கொரோனா தொற்றுநோய்க்கான தடுப்பூசி தயாரிப்பதில் மட்டுமே முழுக்கவனம் செலுத்திவரும் நிலையிலும் மாதம் ஒன்றுக்கு 10 முதல் 12 கோடி டோஸ்கள் மட்டுமே தயாரிக்க முடிகிறது.
இது அனைவருக்கும் போதுமானதாக இருக்காது என்று தெரிவித்த பூனாவாலா, இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை கலந்து போடுவது என்பது சிக்கலை ஏற்படுத்தும்.
ஒரு நிறுவனத்தின் தடுப்பூசியே சிறப்பாக செயல்படும் போது, அதனுடன் மற்றொரு நிறுவனத்தின் தடுப்பூசியை கலந்து போடும் போது ஏற்படும் பின்விளைவுகளுக்கு அவ்விரு நிறுவனங்களும் ஒருவர் மீது மற்றொருவர் பழி சுமத்துவதற்கே வழிவகுக்கும் என்றும் கூறினார்.