கொல்கத்தா: கொல்கத்தா நகரில், பொதுவெளியில் துன்புறுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட நாட்டுநாய் வகையைச் சேர்ந்த ஒரு தெருநாய், இப்போது போலீஸ் படையின் மோப்ப நாய் பிரிவில் சேர்க்கப்படவுள்ளது.

ஆஷா என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த நாய், கொல்கத்தா நகரின் ஒரு இடத்தில் இரத்தம் சிந்திய நிலையில், காவல்துறையினரால் மீட்கப்பட்டது. தொடக்கத்தில் அது பேரக்பூர் வளாகத்தின் செல்ல நாயாக மட்டுமே இருந்தது.

ஆனால், அதனுடைய அபார மோப்பத் திறன், ஆஷாவை வேறு நிலைக்கு இட்டுச் சென்றது. 1.5 ஆண்டுகள் தரப்பட்ட பயிற்சியின் விளைவாக, தற்போது, ஜெர்மன் ‍ஷெஃபர்டு மற்றும் லேப்ரடார் போன்ற உயர்வகை ஜாதி நாய்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் மோப்ப நாய் படைப்பிரிவில் சேர்க்கப்படவுள்ளது.

போலீஸ் மோப்ப நாய் படையில் சேர்க்கப்படவுள்ள முதல் நாட்டு நாய் இதுதான். நாட்டு நாய்கள், பிற எந்த ஜாதி நாய்களுக்கும் சளைத்தவை அல்ல என்பது இதன்மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா காவல்துறையினரின் புதிய முயற்சி பலரால் பாராட்டப்படுகிறது.

– மதுரை மாயாண்டி