சூடானில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அனைவரையும் மீட்கவேண்டியது நம் கடமை என்று வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.

அதேவேளையில், போர் நிறுத்தம் ஏற்படாதவரை அங்குள்ளவர்களை மீட்பது பாதுகாப்பானது அல்ல என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்து வரும் உள்நாட்டு போரில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் கொள்ளப்பட்டுள்ளனர்.

உணவு, தண்ணீர், மின்சாரம் ஏதுமின்றி அங்குள்ள இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் தவித்து வருகின்றனர். இந்த கலவரத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் “சூடானில், போர்நிறுத்தத்தை ஏற்படுத்த ஐ.நா. அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. போர் நிறுத்தம் ஏற்பட்டால் மட்டுமே இந்தியர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்ற முடியும்” என்று கூறியுள்ளார்.

ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையிலான இந்த போரை நிறுத்த சர்வதேச நாடுகள் எந்த ஒரு முயற்சியையும் இதுவரை மேற்கொள்ளாத நிலையில் அங்குள்ள வெளிநாட்டினரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

தவிர, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் சார்ஜ் இல்லாமல் அங்குள்ளவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதோடு உணவில்லாமல் பலரும் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், “ராணுவத்தினர் இடையிலான மோதல் தீவிரம் அடைந்துள்ள சூடானில் 80 தமிழர்கள் உள்ளனர். உள்நாட்டு போர் நடைபெறும் சூடானில் இருந்து தமிழர், இந்தியர்களை மீட்பது நமது கடமை”

“அங்குள்ள தமிழர்களை மீட்பது தொடர்பாக மத்திய அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்” என்று தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது சிரமம்… மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்