சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை கேட்பதில் நியாயமில்லை என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அதிமுக பொதுசசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  சிபிஐ விசாரணை கேட்பதில் நியாயமில்லை, மாநில காவல்துறை நடவடிக்கை தொய்வாக இருந்தால் அதில் கேட்பது நியாயம் உண்டு என்றும் கூறினார்.

இந்தியாவின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான,  சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்  நாடு  முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை, கோட்டூர் புரத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர்  ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அந்த நபர் பாலியல் பலாத்காரத்தை தனது செல்போனில் படம் பிடித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே ஞானசேகரன் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யும் போது சார் என்று அழைத்து யாரிடமோ பேசியது தெரிய வந்துள்ளது. எனவே ஞானசேகரன் தவிர மேலும் சிலருக்கு இந்த விவாகரத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய நீதிமன்றமும் காவல்துறையினரை கடுமையாக சாடி உள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி,  சென்னை அண்ணா பல்கலை. மாணவி  பாலியல் வன்புணர்வு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமி சிபிஐ விசாரணை கேட்பதில் நியாயமில்லை என தெரிவித்துள்ளார்.

மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட  விவகாரத்தில் அரசின் மீது எந்த குற்றச்சாட்டும் கூற முடியாது;  புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை,  காவல்துறை முழுமையாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது, இதற்கு அரசு எப்படி பொறுப்பேற்க முடியும் என கேள்வி எழுப்பியவர்,  இதற்கு அரசு பொறுப்பு என சொல்ல முடியாது. மாநில காவல்துறை நடவடிக்கை தொய்வாக இருந்தால் அதில் கேட்பது நியாயம் உண்டு என்று தெரிவித்துள்ளார்.