மனைவியை கணவன் தான் எரித்து கொலை செய்தார் என்பதற்கான தகுந்த சாட்சி இல்லாத நிலையில் குடும்பத் தகராறு இருந்ததை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு அவர் கொலை செய்தார் என்று கூறமுடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மகளிர் விரைவு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து வேந்தராஜா என்பவர் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த வேந்தராஜா தனது மகளின் சாவுக்கு மனைவி தான் காரணம் என்று கூறி மனைவியை கொடுமைப்படுத்தியதோடு அடித்தும் உள்ளார்.

இந்த நிலையில் வேந்தராஜாவின் மனைவி தீயில் கருகி இறந்ததை அடுத்து, வேந்தராஜா தான் அவரை பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொன்றதாக இறந்து போன பெண்ணின் தந்தை புகார் அளித்தார்.

இந்த வழக்கை விசாரித்த மகளிர் விரைவு நீதிமன்றம் இந்திய தண்டனை சட்டம் 302 மற்றும் 498A ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வேந்தராஜா குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.

மனைவியுடன் தகராறு இருந்தது என்றபோதும் தனது மனைவியை தான் கொலை செய்யவில்லை என்று வேந்தராஜா மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு மீது நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் ஆர். பூர்ணிமா அடங்கிய பெஞ்ச் விசாரணை நடத்தியது.

சம்பவம் நடைபெற்ற போது தான் அந்த இடத்திலேயே இல்லை என்று வேறு இடத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்ததாகவும் வேந்தராஜா கூறினார்.

“சம்பவம் நடைபெறுவதற்கு மூன்று மாதத்திற்கு முன்பு தனது மகளின் 4 சவரன் செயினை யாருக்கு கொடுத்தாய் என்று கேட்டு அவரது நடத்தை மீது சந்தேகம் கொண்ட வேந்தராஜா அவர்களது குழந்தையின் சாவிற்கும் மனைவி தான் காரணம் என்று கூறி அடித்துள்ளார்.

தவிர, சம்பவத்தன்று தனது மகளை கை கால்களை கட்டி, மண்ணெணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார்.

இதையடுத்து மதியம் 1:30 மணிக்கு கத்தியுடன் தனது வீட்டுக்கு ஓடிவந்த வேந்தராஜா எனது மகளை தீர்த்துக்கட்டி விட்டதாகக் கூறிவிட்டு ஓடிச் சென்று விட்டார்” என்று வேந்தராஜா-வின் மாமனார் சாட்சியளித்தார்.

மேலும், வேந்தராஜா கூறியதைக் கேட்டு பதைபதைக்க மகளின் வீட்டிற்கு ஓடிய நிலையில் அங்கே வெளியில் பூட்டு போடப்பட்டிருந்ததாகவும் உள்ளே மகள் கதறும் சத்தம் கேட்டு கதவை உடைத்துக் கொண்டு சென்றதாகவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், இறந்த பெண்ணின் சகோதரி அளித்த வாக்குமூலத்தில், வீட்டிற்குள் தான் மட்டுமே சென்று பார்த்ததாகவும் அதன்பிறகே தனது தந்தையிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.

சாட்சிகளின் இந்த முரணான தகவலை அடுத்து அக்கம்பக்கத்தினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வேந்தராஜா வீட்டில் இருந்து வெளியேறி 15 நிமிடம் கழித்து அலறல் சத்தம் கேட்டதாகக் கூறியுள்ளனர்.

மேலும், காவல்துறை தரப்பில் வேந்தராஜா கத்தியுடன் தனது வீட்டுக்கு ஓடிவந்ததாக இறந்த பெண்ணின் தந்தை அளித்த புகாரில் கூறவில்லை என்று விளக்கமளிக்கப்பட்டது.

இந்த சாட்சியங்களைக் கொண்டு தீர்ப்பளித்த நீதிபதிகள், இறந்த பெண்மணி நல்ல திடகாத்திரமான உடல்வாகுடன் இருந்தவர் என்பதால் அவரை வேந்தராஜா ஒருவரால் கை கால்களை கட்டியிருக்க வாய்ப்பில்லை.

தவிர, இறந்தவரின் கைகள் கட்டப்பட்டிருந்ததற்கான அறிவியல்பூர்வ ஆதாரம் ஏதும் இல்லை, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கும் போதே அலறும் சூழலில் குற்றம்சாட்டப்பட்டவர் சம்பவ இடத்தில் இருந்து சென்று 15 நிமிடம் கழித்தே அலறல் சத்தம் கேட்டதாக சாட்சிகள் கூறியுள்ளனர்.

இவற்றை வைத்து பார்க்கும் போது இறந்த பெண் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றே உறுதி செய்யப்படுகிறது. மேலும், வேந்தராஜா தான் கொலை செய்தார் என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் சமர்பிக்கப்படாததை அடுத்து குடும்பத் தகராறு ஒன்றையே ஆதாரமாக வைத்து வேந்தராஜா தான் அவரது மனைவியை கொலை செய்தார் என்று கூறமுடியாது என்று கூறினர்.

இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் முறையான விசாரணை நடத்தவில்லை என்றும் கண்டித்த நீதிபதிகள் கொலை வழக்கில் இருந்து மனுதாரர் வேந்தராஜாவை விடுவித்து தீர்ப்பளித்தனர்.