சென்னை: யோகிகள், சந்நியாசிகள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது என்னுடைய பழக்கம் என ரஜினியை விமர்சித்த திருமாவளவனுக்கு சென்னை விமான நிலையத்தில்  ரஜினிகாந்த் பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவர். ஒவ்வொரு திரைப்படம் முடிந்த வெளியாகும் சமயத்தில், ஓய்வுக்காக இமயமலை சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று மற்றும் உடல்நிலை பாதிப்பு  காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இமயமலை செல்லாமல் இருந்து வந்த ரஜினிகாந்த், சமீபத்தில் நடித்து வெளியாகி உள்ள ஜெயிலர் படத்தை தொடர்ந்து, மீண்டும் இமயமலை பயணம் மேற்கொண்டார்.

ஜெயிலர் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று பாக்ஸ் ஆபிசிலும் நல்ல வசூலைப் பெற்ற நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இமயமலையில் இருந்து திரும்பி தமிழகம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர், பத்ரிநாத், ஜார்கண்ட், உத்தர பிரதேசம் என தொடர்ந்து பயணம் மேற்கொண்டார். இதற்கிடையில் ரஜினிகாந்த் இல்லாமலேயே ஜெயிலர் படத்தின் வெற்றி விழாவை படக்குழுவினர் கொண்டாடினர்.

ரஜினியின் ஜார்கண்ட் பயணத்தின் போது அங்குள்ள சின்னமாஸ்தா கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த், தொடர்ந்து யசோதா ஆசிரமம் சென்று அங்கு தியானத்தில் ஈடுபட்டார். பின்னர் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார். பின்னர் ரஜினிகாந்த் உத்தர பிரதேசம் சென்று யோகி ஆதித்யநாத் உடன் ஜெயிலர் படம் பார்க்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து லக்னோ சென்ற ரஜினிகாந்த் உத்தர பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா உடன் ஜெயிலர் படம் பார்த்தார். பின்னர் யோகி ஆதித்யநாத் இல்லத்திற்கு மனைவி லதா உடன் சென்ற ரஜினிகாந்த், தன்னைவிட 21 வயது குறைந்தவரான யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கினார்.

ரஜினிகாந்த்தின் இந்த செயல் சமூக வலைதளங்களிலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் விவாதத்தை கிளப்பியது. விசிக தலைவர் திருமாவளவன் ரஜினியின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. திருமாவுக்கு ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில், ரஜினி  தனது ஆன்மிக பயணத்தை முடித்து விட்டு   சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவரது ரசிகர்கள் திரண்டு ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “நான்கு வருடங்களுக்கு பிறகு சென்று வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. ஜெயிலர் திரைப்படத்தை மாபெரும் வெற்றி படமாக மாற்றிய என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கும், உலக மக்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை ஒரு நல்ல படத்தை உருவாக்குங்கள் என உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன், அனைத்து காட்சிகளையும் ரசித்து ரசித்து எடுத்த இயக்குனர் நெல்சன், பின்னணி இசையின் மூலம் படத்தை மாபெரும் வெற்றிக்கு கொண்டு சென்ற அனிருத், தொழில்நுட்ப கலைஞர்கள், உடன் நடித்த நடிகர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இதையடுத்து செய்தியாளர்கள்,  உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு தனது பானியில் பதில் கூறிய ரஜினிகாந்த், “யோகிகள், சந்நியாசி ஆனவர்கள் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் கூட அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது என்னுடைய பழக்கம்” என திருமாவளவனுக்கு பதிலடி கொடுத்தார்.

சந்திரயான் குறித்த கேள்விக்கு,  “அதைப் பற்றி எனக்கு தெரியவில்லை என பதில் அளித்தவர், தொடர்ந்து செய்தியாளர்கள் அரசியல் தொடர்பான கேள்விகளை எழுப்பிய நிலையில்,  அரசியலைப் பற்றி நான் பேச விரும்பலை என கூறிச்சென்றார்.

உ.பி. முதலமைச்சர் காலில் விழுந்து ஆசி பெற்ற ரஜினியை கடுமையாக விமர்சித்த திருமாவளவன்…