சென்னை: வன்னியர்கள் தன்னை எதிரியாக கருதவில்லை என்றும், அவர்களை பாமகவின் பிடியிலிருந்து மீட்பதே தனது கடமை என்றும் தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.
ஒரு நேர்காணலில் அவர் கூறியிருப்பதாவது, “அரியலூர் தொகுதி பொன்பரப்பியில் நடந்த தலித்துகள் மீதான தாக்குதலுக்கு பாமகவே காரணம். அந்த கிராமத்தில் வாழும் தலித்துகள் வாக்களிக்க முடியாத வண்ணம் மிரட்டப்பட்டுள்ளனர் மற்றும் தடுக்கப்பட்டுள்ளனர்.
பாமக எங்கெல்லாம் வலிமையாக இருக்கிறதோ, அங்கெல்லாம் வாக்குச்சாவடியைக் கைப்பற்றுதல், வாக்காளர்களை மிரட்டுதல் உள்ளிட்ட பணிகளை செய்துவருகிறது அக்கட்சி. தருமபுரி மக்களவைத் தொகுதியில், 8 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருப்பதானது, அக்கட்சிக்குதான் அவமானம்.
வன்னியர் சமுதாயம் எனக்கு எதிராக எப்போதுமே இருந்ததில்லை. அவர்களைத் தூண்டிவிடுவதே மருத்துவர் ராமதாசும், அவரது மகன் அன்புமணி ராமதாசும்தான்.
அச்சமூகத்தின் குழந்தைகளுடைய மனதில்கூட அவர்கள் விஷத்தை ஏற்றுகிறார்கள்.
எனவே, அவர்களுடைய பிடியிலிருந்து அச்சமூகத்தை மீட்பதை என்னுடைய கடமையாக கருதுகிறேன். பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்துமாறு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்திக்கவுள்ளேன்” என்றார்.
– மதுரை மாயாண்டி