திமுக கூட்டணியைவிட்டு, தொகுதி பங்கீட்டு எண்ணிக்கை சிக்கல் காரணமாக, காங்கிரஸ் கட்சி வெளியேறலாம் என்றும், அக்கட்சி கமலின் மூன்றாவது அணியில் இணையலாம் என்றும் சில ஊடகங்கள், யூகங்களுக்கு இறக்கை கட்டி பறக்க விடுகின்றன.
திமுகவிடம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளை வாங்கிவிட வேண்டுமென்று ராகுல் காந்தி கறாராக இருப்பதாகவும், தேவைப்பட்டால் கூட்டணியை முறித்துக்கொள்ளுமாறு அவர் கூறியிருப்பதாகவும், தமிழ்நாட்டில் இழப்பதற்கு ஒன்றுமில்லை என அவர் நினைப்பதாகவும் அந்த ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன.
திமுக – காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை இடைவெளி நிலவும் சூழலில், நேற்று இரவு பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மூன்றாவது அணியில் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கையில்லை என்று தெரிவித்து, யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதன்மூலம், மய்ய நடிகருடன், காங்கிரஸ் சேர்ந்துகொள்ளும் என்ற கருத்து முடித்துவைக்கப்பட்டுள்ளது.
சில அரசியல் பார்வையாளர்கள் கூறுவதாவது; திமுக ஆதரவு அலை வீசக்கூடிய இந்த தேர்தல்களில், காங்கிரஸ் 20+ இடங்களில் நிற்பதாக வைத்துக்கொண்டால், குறைந்தபட்சம் 20 இடங்களை வெல்லும். அந்தவகையில் பார்த்தால், கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், சட்டசபையில் இந்த எண்ணிக்கை காங்கிரசுக்கு கெளரவமான ஒன்றாக இருக்கும். மேலும், இதன்மூலம் கட்சியினரின் தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு, 2024 நாடாளுமன்ற தேர்தலையும் உற்சாகமாக எதிர்கொள்ள வழியேற்படும்.
ஆனால், அதனைவிடுத்து, கமலுடன் போய்சேர்ந்தால், அதிக தொகுதிகளில் போட்டியிட்ட சந்தோஷம் மட்டும்தான் மிஞ்சும். மற்றபடி, கட்சிக்கு சட்டசபையில் ஒரு இடம்கூட கிடைப்பது சந்தேகமே. வாக்கு சதவிகிதமும் மிகவும் குறையும் ஆபத்து நேரும்.
இத்தகயை நிதர்சனங்களை, தனது அனுபவத்தால் உணர்ந்த காரணங்களாலேயே, மேலிடத்திலிருந்து சில நெருக்கடிகள் வருவதாக கூறப்பட்டாலும், திமுகவுடன் கூட்டணி என்பதில் கே.எஸ்.அழகிரியும், பல மாநில தலைவர்களும் உறுதியாக இருப்பதை, தனது கருத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர்! என்கிறார்கள் அந்தப் பார்வையாள்ரகள்.