மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீட்டுப் பிரிவில், வன்னியர்களுக்கு 10.5% தனி ஒதுக்கீட்டை அறிவித்த எடப்பாடி அரசின் மீது அரசியல்ரீதியாக இருக்கும் விமர்சனங்கள் ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், இதுதொடர்பாக வேறொரு முக்கியமான எச்சரிக்கை சமூக ஆர்வலர்களால் சிலரால் விடுக்கப்படுகிறது.
குறிப்பிட்ட சாதிக்கு மட்டுமான உள்ஒதுக்கீடு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பான எச்சரிக்கைதான் அது!
அவர்களுடைய கருத்தின் சாராம்சம் இதுதான்: இந்திய சமூகம் என்பது ஒரு கெட்டிப்பட்டுப்போன, பிற்போக்குத்தனமான சாதிய சமூகம். இங்கு பல விஷயங்கள் பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. அதேசமயம், பல்வேறு சாதிகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளால் இந்த சமூக சக்கரம் தொடர்ந்து நகர்ந்து கொண்டுள்ளது.
அப்படியிருக்கையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் தனியான ஒரு ஒதுக்கீட்டை அறிவிப்பது, பிற சமூகங்களின் மத்தியில் பெரிய அதிருப்தியையும் கொந்தளிப்பையும் உண்டாக்கும். தற்போதைய சூழலில், வன்னியர்களுக்கு அறிவிக்கப்பட்ட தனி ஒதுக்கீட்டால் எம்பிசி பிரிவிலுள்ள மற்ற பிரிவுகள் கொதித்துப் போயுள்ளனர். அவர்கள், தேர்தலில் தங்களின் எதிர்ப்பை நிச்சயம் பதிவு செய்யும் வாய்ப்புகள் உள்ளன.
மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சமூகத்தில் பெரிய பதற்றத்தை உருவாக்கும். இன்னின்ன சாதியினர் இவ்வளவு இருக்கிறார்கள் என்ற விபரம் வெளியானால், அது புதிய அடக்குமுறைகளையும், அமைதியின்மையையும், வன்முறைகளையும், உளவியல் ஆபத்துகளையும் உருவாக்கி, மீட்கவே முடியாத நல்லிணக்க சிதைவுக்கு இட்டுச் செல்லும்.
எனவே, ஒவ்வொரு சாதியமைப்பும், நாங்கள் இத்தனை கோடி, அத்தனை கோடி என்று சொல்லிக்கொள்வதை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதே சமூகத்திற்கு நல்லது. எனவே, தேர்தல் ஆதாயத்திற்காக, எதிர்க்கட்சியை சார்ந்தவர்கள் குறிப்பிட்ட அளவு உள்ஒதுக்கீடு தருவோம் என்று சொல்வதும், ஆட்சியில் இருப்போர் குறிப்பிட்டளவு உள்ஒதுக்கீட்டை அறிவிப்பதும், இன்னின்ன சாதியினர் இவ்வளவு இருக்கிறார்கள் என்ற கணக்கெடுப்பை நடத்துவதும் அமைதியான சமூக அமைப்பிற்கு மாபெரும் தீங்கை கொண்டுவரும் என்கின்றனர் அவர்கள்!