சென்னை: அதிமுக ஆட்சியில் 6 லட்சம் கோடி ரூபாய் கடனில் தமிழகம் தவித்துக் கொண்டிருக்கிறது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறி உள்ளார்.

ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின்  இன்று மதுரையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: திமுக தேர்தல் அறிக்கையை அதிமுக ஜெராக்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன். அதிமுக தேர்தல் அறிக்கை வில்லன்கூட அல்ல, காமெடி வில்லன் என்றார்.

பின்னர் மாலையில் தாம்பரம் பிரச்சாரக் கூட்டத்தில் தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். திரண்டிருந்த மக்கள் மத்தியில் ஸ்டாலின் பேசியதாவது:

குடும்ப தலைவிகளுக்கு மாதம் உரிமத்தொகை அளிக்கப்படும், பெட்ரோல், டீசல் விலைகள், பால் விலை குறைக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகளை குறிப்பிட்டுள்ளோம். ஆட்சிக்கு வந்தவுடன் அவை செயல்படுத்துவோம்.

ஏப்ரல் 6ம் தேதி பழனிசாமியின் வேடம் களையப்படும். தமிழ்நாடு இப்போது 6 லட்சம் கோடி கடனில் தவித்துக் கொண்டிருக்கிறது. சட்டம், ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் இந்த ஆட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று பேசினார்.