டெல்லி

காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை மேலும் ரூ.1745 கோடி அபராதம் விதித்து நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

கடந்த 2018-2019ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை 45 நாட்கள் தாமதமாகத் தாக்கல் செய்ததாகக் கூறி, காங்கிரஸ் கட்சியின் 4 வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது. அபராதமாகக் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.135 கோடியை வருமான வரித்துறை எடுத்துக்கொண்டது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் இதை எதிர்த்து காங்கிரஸ் வழக்கு தொடர்ந்ததால் அதனைத் தள்ளுபடி செய்து நீதிமன்றத்தில் உத்தரவிட்டது.

கடந்த 2017-2018, 2018-2019, 2019-2020, 2020-2021 ஆண்டுகள் வரையிலான 4 நிதியாண்டுகளுக்கான காங்கிரசின் வருமானவரிக் கணக்குகளை வருமானவரித்துறை மறுமதிப்பீடு செய்தது. மேற்கண்ட 4 ஆண்டுகளுக்கான வருமானவரிக் கணக்கில் நிலவும் முரண்பாடுகளுக்காகக் காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை ரூ.1,823 கோடியே 8 லட்சம் அபராதம் விதித்துள்ளது. அதாவது ரூ.1,076 கோடியே 35 லட்சம் அபராதம் மற்றும் மீதி தொகை வட்டி ஆகும்.

காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை இது குறித்துக் கடந்த 29 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் கடந்த 2014-15 முதல் 2016-17 வரையிலான 3 நிதியாண்டுகளுக்கான வருமானவரிக் கணக்கில் நிலவும் முரண்பாடுகளுக்காகக் காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை மேலும் ரூ.1,745 கோடி அபராதம் விதித்துள்ளது. நேற்று இது தொடர்பாகக் காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை  நோட்டீஸ் அனுப்பியது.

இதனால் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமாக ரூ.3,567 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இன்று வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.135 கோடியை வருமானவரித்துறை எடுத்தது தொடர்பாகக் காங்கிரஸ் தொடர்ந்துள்ள வழக்கு உசநீதிமன்றத்தில் விசாரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.