சென்னை:

கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தொடரப்பட்ட வருமான வரித்துறை தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றம், அடுத்த விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராகாவிட்டால், அவரை கைது செய்ய வாரண்டு பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

வருமான வரிமுறைகேடு செய்ததாக வருமான வரித்துறை கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி உள்பட அவர்களது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.  கடந்த 2015-16ம் அவர்கள் தாக்கல் வருமான வரி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முறைகேடு உள்ளதாகவும், கருப்பு பணம் மூலம் பல சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளது என்றும், அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல  வெளி நாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளது குறித்து வருவமான வரி கணக்கில் காட்டாமல் மறைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர்கள்  மீது வருமான வரித்துறை கருப்பு பண சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பான வழக்கு  சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம் , அதை நிராகரிப்பதாக கூறி மனுவை தள்ளுபடி செய்த நிலையில், விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி சிதம்பரம் கட்டாயம் ஆஜர் ஆக வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், அடுத்த விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் பிடியாணை (வாரண்டு) பிறப்பிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது.