ஸ்ரீஹரிகோட்டா:

இன்று அதிகாலை ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இஸ்ரோ சார்பில் அனுப்பப்பட்டு வரும் வழிகாட்டி செயற்கைக்கோள் வரிசையில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ செயற்கைக்கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி41 ராக்கெட் இன்று அதிகாலை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

சுமார் 1.4 டன் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி 41 ராக்கெட் மூலம் அனுப்பி, புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டம்   ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ செயற்கைக்கோளுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த செயற்கைக் கோளில் இருந்து பெறும் தகவல்கள், மீனவர்களுக்கு உதவும். மேலும்   கடல்வழி போக்குவரத்து, வான்வழி போக்குவரத்து மற்றும் கண்காணிப்பிற்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஐஆர்என்எஸ்எஸ்-1ஐ வெற்றிகரமாக நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மாற்று செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் இரண்டாவது முயற்சி இது.  கடந்த வருடம்  ஆகஸ்ட் மாதத்தில் அனுப்பப்பட்ட பி.எஸ்.எல்.வி-ன் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஹெச் செயற்கைக்கோள் அதன் வெப்ப தகடுகள் பிரியாததால் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.