ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இஸ்ரோவின் தொடர் சாதனைகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
அமெரிக்கா ரஷ்யா போன்ற உலக நாடுகளை மிஞ்சும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான பல்வேறு சாதனைகளை உருவாக்கி வருகிறது. ஏற்கனவே சந்திரனின் தென்துருவதுக்கு விண்கலத்தை அனுப்பி ஆய்வு செய்து உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில், சமீபத்தில் இரு விண்களங்களை SpaDeX டாக் செய்து உலக நாடுகளை திரும்பி பார்க்க செய்தது.
இந்த நிலையில், இஸ்ரோவின் 100-வது ராக்கெட் இன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதற்கான 24 மணி நேர கவுண்டவுன் நேற்று காலை தொடங்கிய நிலையில், இன்று (ஜனவரி 29, 2025) காலை 6 மணி 23 நிமிடத்தில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது.
என்.வி.எஸ்-2 செயற்கைக்கோளை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட்டின் முதல் நிலை வெற்றிகரமாக பிரிந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அந்த ராக்கெட்டை நிலைநிறுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சாதனையை அடத்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவரையொருவர் கட்டித் தழுவியும், கை கொடுத்தும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
இந்த ராக்கெட், ஜி.பி.எஸ்.சேவை அளிப்பதற்கான என்.வி.எஸ் -1 என்ற செயற்கைக்கோளை விண்ணில் நிலை நிறுத்தும். இந்த NVS -2 செயற்கைக்கோள், தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து பேரிடர் காலங்களில் துல்லிய தகவல்களை தெரிவிக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் மற்றும் இஸ்ரோ தலைவராக நாராயணன் பொறுப்பேற்ற பின்பு ஏவப்பட்ட முதல் ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.