டில்லி

ந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்துக்கும் ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளுக்கும் தொடர்பு துண்டிக்கப் பட்டுள்ளதால் விஞ்ஞானிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன்ர்.

கடந்த வாரம் வியாழன் அன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தினால் ஜி சாட் 6ஏ என்னும் செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப் பட்டது.    இந்தியாவின் அதிக சக்தி கொண்ட தொலை தொடர்பு செயற்கைக் கோள் இது என்பது குறிப்பிடத் தக்கது.  கடந்த 2015 ஆம் வருடம் செலுத்தப் பட்ட ஜிசாட் 6 செயற்கைக் கோள் போன்ற இந்தக் கோள், அதை விட பலமடங்கு சக்தி வாய்ந்தது ஆகும்.

சுமார் ரூ. 270 கோடி செலவில் வடிவமைக்கப்பட்ட இந்த  செயற்கைக் கோள் மூலம்   மொபைல் உள்ளிட்ட அனைத்து தொலை தொடர்பு சாதனங்களும் பயனடையும் என கூறப்பட்டது.   மேலும் இந்த செயற்கைக் கோளின் ஆயுள் 10 வருடங்களுக்கு மேல் நீடிக்கும் எனவும்   இதன் மூலம் ராணுவ தொடர்புகளும் எளிதாக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்திய விண்வெளிக்கழகத்துக்கும் செயற்கைக்கோளுக்கும் இடையிலான  தொடர்பு நேற்று வெற்றிகரமாக நிறுவப்பட்டது.   அந்த தொடர்பு 53 நிமிடங்கள் நீடித்தது.   அதன் பின் அந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது.  இவ்வாறு தொடர்பு துண்டிக்கப்பட்டது விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்த தொடர்பு துண்டிப்புக்கான காரணத்தை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.   காரணம் கண்டுபிடிக்கப்பட்ட பின் மீண்டும் தொடர்பு இணைப்பது குறித்த நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என தெரிய வந்துள்ளது.