2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் இலக்குடன் செயல்பட்டு வருகிறது.

புவிவட்டப்பாதைக்கு அதிக எடையுள்ள செயற்கைகோள்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட மறுபயன்பாட்டு ராக்கெட்டை துறைசார்ந்த நிறுவனங்களுடன் சேர்ந்து உருவாக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முயற்சி மேற்கொண்டு வருவதாக இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத்

NGLV என அழைக்கப்படும் அடுத்த தலைமுறை ஏவுகணை வாகன ராக்கெட்டின் வடிவமைப்பில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும், இதில் இஸ்ரோவுடன் ஒத்துழைக்க தொழில்துறையின் முன்வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

“வளர்ச்சி திட்டங்களில் தொழில்துறையினரின் ஈடுபடுத்துவதே இதன் நோக்கம். இதன் மூலம் இதற்கான முதலீட்டை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நம் அனைவருக்குமான வளர்ச்சிக்குத் தேவையான ராக்கெட் தொழில்நுட்பத்தை உருவாக்க தொழில்துறையினர் முதலீடு செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம்” என்று சோமநாத் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

புவியின் குறைந்த சுற்றுப்பாதைக்கு 20 டன் எடையும் ஜியோஸ்டேஷனரி டிரான்ஸ்ஃபர் ஆர்பிட்டில் (GTO) பாதைக்கு 10 டன் எடையும் சுமந்து செல்லக் கூடிய ராக்கெட்டை வடிவமைக்க திட்டிமிடப்பட்டுள்ளது என்றார்.

மற்றொரு இஸ்ரோ அதிகாரி கூறுகையில், 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதால், ஆழமான விண்வெளி பயணங்கள், மனித விண்வெளி விமானங்கள், சரக்கு பயணங்கள் மற்றும் பல தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் சுற்றுவட்டப்பாதையில் வைப்பது போன்றவற்றையும் கண்காணித்து வருவதால் புதிய ராக்கெட் உதவியாக இருக்கும் என்றார்.

NGLV ஆனது, விண்வெளிப் போக்குவரத்தை அதிக செலவு குறைந்ததாக மாற்றும், மொத்த உற்பத்திக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு எளிய, வலுவான இயந்திரமாகக் கருதப்படுகிறது.

இஸ்ரோவின் போர்க்குதிரை ராக்கெட்டான போலார் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் (பிஎஸ்எல்வி) 1980களில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் எதிர்காலத்தில் ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடியாது என்றும் சோமநாத் கூறினார்.

இஸ்ரோ NGLV இன் வடிவமைப்பை ஒரு வருடத்திற்குள் தயார் செய்து அதை உற்பத்திக்காக தொழில்துறைக்கு வழங்க திட்டமிட்டுள்ளது, முதல் ஏவுதல் 2030 இல் தற்காலிகமாக திட்டமிடப்பட்டுள்ளது.

NGLV என்பது மீத்தேன் மற்றும் திரவ ஆக்ஸிஜன் அல்லது மண்ணெண்ணெய் மற்றும் திரவ ஆக்ஸிஜன் போன்ற இயற்கை எரிபொருள் கலவைகளால் இயக்கப்படும் மூன்று-நிலை ராக்கெட்டாக இருக்கலாம்.

மறுபயன்பாட்டு NGLV ராக்கெட் மூலம் ஒரு கிலோ சுமந்து செல்ல இந்திய ரூபாயில் சுமார் 1.5 லட்சம் செலவாகும் (1900 USD) என்று சமீபத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் சோம்நாத் கூறியிருந்தார்.

2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் 9.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (சுமார் ₹78,996 கோடி) இருந்தது.

மேலும் 2025 ஆம் ஆண்டுக்குள் 12.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ₹1,05,328 கோடி) தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று ஐஎஸ்பிஏ-இ&ஒய் அறிக்கை ‘டெவலப்பிங் தி ஸ்பேஸ் ஈகோசிஸ்டம் இந்தியா: உள்ளடக்கிய வளர்ச்சியில் கவனம் செலுத்துதல்’ என்ற தலைப்பில் தெரிவித்துள்ளது.