134 பேர் இறந்ததை அடுத்து மோர்பி பால பராமரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கொலைகுற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இருந்து 64 கி.மீ. தொலைவில் உள்ள மோர்பி தொங்கு பாலம் நேற்று மாலை சுமார் 6:30 மணிக்கு அறுந்து விழுந்தது.

இதுவரை இதில் 134 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

140 ஆண்டுகள் பழமையான இந்த பாலத்தைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இதனை சீரமைத்து பராமரிக்கும் பணியை ஓதவ்ஜி படேல் என்பவருக்கு சொந்தமான ஒரேவா குழும நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

மார்ச் 2022 முதல் மார்ச் 2037 வரை 15 ஆண்டுகளுக்கு இந்த பால பராமரிப்பு மற்றும் செயல்பாட்டை உறுதிசெய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட இந்த நிறுவனம் ஆறு மாதங்களாக மேற்கொண்ட சீரமைக்கும் பணியைத் தொடர்ந்து அக்டோபர் 26 ம் தேதி குஜராத்தி வருடப்பிறப்பு அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

15 ரூபாய் கட்டணம் வசூலித்து பாலத்தின் மீது பொதுமக்களை அனுமதித்து வந்த இந்த நிறுவனம் தீபாவளி விடுமுறையை அடுத்து மக்கள் கூட்டம் நிரம்பியதால் அனைவருக்கும் டிக்கெட் கொடுத்து பாலத்தில் அனுப்பி வந்துள்ளது.

நேற்று மாலை சுமார் 500க்கும் அதிகமானோர் இந்த பாலத்தில் ஒரே நேரத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டதால் பாரம் தாங்காமல் அறுந்து விழுந்தது.

இதில் 134 பேர் மச்சு ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகையே உலுக்கிய இந்த அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து முறையான அனுமதி பெறாமல் பாலம் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டதாக மோர்பி நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது.

இது தொடர்பாக பராமரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டு ஐபிசி 304 மற்றும் 308 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோர்பி காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.