இஸ்ரோ: 7-ந்தேதி விண்ணுக்கு செலுத்துகிறது பி.எஸ்.எல்.வி. சி-36 ராக்கெட்

Must read

சென்னை:
புவி ஆய்வு செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-36 ராக்கெட் 7-ந்தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்ட மிட்டு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறினர்.
 
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) புவி ஆய்வு, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செயற்கைகோள்களை வடிவமைத்து விண்வெளிக்கு செலுத்தி வருகிறது.
pslv36
புவி ஆய்வுக்காக ஏற்கனவே 2003-ம் ஆண்டு ரிசோர்ஸ் சாட்-1,  2011-ம் ஆண்டு ரிசோர்ஸ் சாட்-2 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளன.
இதனைத் தொடர்ந்து தற்போது 1,235 கிலோ எடை கொண்ட 3-வது செயற்கைகோள்,  ரிசோர்ஸ் சாட்-2ஏ வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது பி.எஸ்.எல்.வி. சி-36 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இது 38-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும்.
பி.எஸ்.எல்.வி. சி-36 ராக்கெட் மூலம் ரிசோர்ஸ் சாட்- 2ஏ செயற்கைகோள் 7-ந்தேதி (புதன்கிழமை) காலை 10.24 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.
இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 817 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.
அதில் இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாக படம் எடுக்க உதவும் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.  இதன் ஆயுட் காலம் 5 ஆண்டுகள்.  இதற்கான  பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.
இந்த தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article