சிரியாவில் கோலன் பகுதியில் அமைந்த இஸ்ரேலிய நிலைகள் மீது ஈரானிய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளன என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. பதிலுக்கு இஸ்ரேல், ஈரானிய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சிரியாவில் அதிபர் ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுக்குள் கொண்டு வர அரச படைகள் முயற்சித்து வருகின்றன.
சிரியாவுக்கு ஆதரவாக ஈரான் நாட்டு படைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சிரியாவில் உள்ள ஈரான் படைகள் இஸ்ரேலிய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளன என தகவல் வெளியாகியது.
இது குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பு அதிகாரியான ஜோனாதன் கான்ரிகஸ் இன்று செய்தியாளர்களிடம், “சிரிய ஆதரவு ஈரானிய படைகள் கோலன் பகுதியில் அமைந்த இஸ்ரேலிய நிலைகள் மீது வான்வழி தாக்குதலை நடத்தி உள்ளன.
அவர்கள் ஏறக்குறைய 20 ஏவுகணைகளை கொண்டு கோலன் பகுதியிலுள்ள இஸ்ரேலிய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அவற்றில் சில ஏவுகணைகளை இஸ்ரேல் வழிமறித்து அழித்துள்ளது.
இந்த தாக்குதலில் உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை. இஸ்ரேல் நிலைகளின் மீது நடந்த தாக்குதலில் குறைந்த அளவே சேதம் ஏற்பட்டு உள்ளது” என தெரிவித்துள்ளார்.
பதிலுக்கு சிரியாவில் உள்ள ஈரானிய நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.