இஸ்ரேல் மீது பாலஸ்தீன தீவிரவாத அமைப்பான ஹமாஸ் கடந்த இரண்டு நாட்களாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேல் போர் பிரகடனம் செய்துள்ளது.
1973 ம் ஆண்டுக்குப் பிறகு 50 ஆண்டுகள் கழித்து இதுபோன்ற ஒரு மிகப்பெரிய நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது.
தனது எல்லைக்கு உட்பட்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற பாலஸ்தீன் மீது தாக்குதல் நடத்த தேவையான நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது.
இஸ்ரேல் மீது நேற்று அதிகாலை 5000 ஏவுகணைகளை வீசி திடீர் தாக்குதலை துவக்கிய ஹமாஸ் இஸ்ரேல் கட்டமைத்திருந்த ‘அயர்ன் டோம்’ (Iron Dome) பாதுகாப்பு அம்சத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.
இந்த தாக்குதலில் இதுவரை 600க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும் ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தாக்குதலைத் தொடர்ந்து காசா எல்லையில் அமைக்கப்பட்ட தடுப்புகளைத் தகர்த்தெறிந்து இஸ்ரேலிய பகுதிக்குள் ஊடுருவிய ஹமாஸ் இயக்கத்தின் அல் கஸம் படைப்பிரிவினர் இஸ்ரேலிய ராணுவ நிலைகள் மற்றும் சோதனை மையங்களைக் கைப்பற்றி தங்கள் தாக்குதல் எல்லையை விரிவுபடுத்தியுள்ளனர்.
மோட்டார் பொருத்தப்பட்ட பாராசூட் மூலம் இஸ்ரேலிய பகுதிக்குள் நுழைந்த ஹமாஸ் குழுவினர் இஸ்ரேலிய பெண்கள் மற்றும் குழந்தைகளை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனை அடுத்து பாலஸ்தீன பகுதி மீது வான்வழி தாக்குதலை துவங்கிய இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்த தனது ராணுவத்தை காசா எல்லை நோக்கி அனுப்பி வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரேலின் இந்த போர் பிரகடனத்தை அடுத்து அதன் அண்டை நாடுகளான லெபனான் மற்றும் சிரியா எல்லையை பலப்படுத்த தேவையான முயற்சியையும் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டு வருகிறது.
மேலும், ஹமாஸ் குழுவினருக்கு ஈரான் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அல் கஸம் தீவிரவாத குழுவுக்கு தேவையான ஆயுத உதவியை ஈரான் செய்துவருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவி வருகிறது.