இஸ்ரேல் நாட்டின் மத்திய தரைக்கடல் பகுதியை ஒட்டிய காசா பகுதி பாலஸ்தீன தீவிரவாத அமைப்பான ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று அதிகாலை இஸ்ரேலின் ஆஷ்கிலான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் மீது சுமார் 5000 ஏவுகணைகளை வீசித்தாக்கியதுடன் இஸ்ரேலுக்குள் ஊடுருவி நூற்றுக்கணக்கானோரை ஹமாஸ் படையினர் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதனையடுத்து காசா மீது போர் பிரகடனம் செய்த பெஞ்சமின் நெதன்யாகு லட்சக்கணக்கான இஸ்ரேல் ராணுவ வீரர்களை களமிறக்கியுள்ளார்.

ஹமாஸ் படையினர் மீதான தாக்குதல் மூன்றாவது நாளாக தொடர்ந்து வரும் நிலையில் காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், எரிபொருள் உள்ளிட்டவற்றை இஸ்ரேல் துண்டித்துள்ளது.

இதனால் 350 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பான இந்த காசா பகுதியில் வசிக்கும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மிகவும் இன்னலுக்கு ஆளாக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கான உணவு உள்ளிட்டவற்றுக்கும் இஸ்ரேல் அரசு தடை ஏற்படுத்தியுள்ளது.

காசாவைக் கைப்பற்ற இஸ்ரேல் தீவிர முற்றுகையை தொடங்கியுள்ள நிலையில் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு மேற்கு உலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதோடு அமெரிக்கா இதற்கான ராணுவ உதவிகளை செய்ய முன்வந்துள்ளது.

இதனையடுத்து காசா எல்லையில் போர் தீவிரமடைந்துள்ளதை அடுத்து அங்குள்ள 18000க்கும் மேற்பட்ட இந்தியர்களின் கதி என்ன என்பது குறித்து இந்தியர்கள் கவலையடைந்துள்ளனர்.