டமாஸ்கஸ்:

சிரியாவில் இருந்து இஸ்ரேல் எல்லைக்குள் அனுப்பப்பட்ட ஈரான் நாட்டுக்கு சொந்தமான ஆளில்லா விமானத்தை இஸ்ரேல் நாட்டு விமானப்படையினர் இன்று சுட்டு வீழ்த்தினர். மேலும், இதற்கு பதிலடியாக சிரியாவில் உள்ள ஈரான் ராணுவ தளங்களின்மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின.

தங்கள் நாட்டில் ராணுவ நிலைகளின்மீது இன்று தாக்குதல் நடத்த வந்த இஸ்ரேல் நாட்டு போர் விமானங்களில் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக சிரியா அரசு அறிவித்துள்ளது. அதே நேரம், சிரியாவில் உள்ள ஈரான் மற்றும் சிரியா நாட்டு ராணுவத்தை சேர்ந்த 12 முகாம்களின் மீது இன்று இஸ்ரேல் போர் விமானங்கள் வான்வழி தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலின்போது சிரியாவின் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளான தங்கள் நாட்டை சேர்ந்த ஒரு விமானம் வீழ்த்தப்பட்டதாகவும், இது இஸ்ரேல் நாட்டின் வடக்கே உள்ள ஜச்ரீல் பள்ளத்தாக்கு பகுதியில் விழுந்து நொறுங்கியதாகவும், அந்த விமானத்தில் இருந்து கீழே குதித்ததில் காயமடைந்த இரு விமானிகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இஸ்ரேல் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.