லியோடாரா,  காஷ்மீர்

காஷ்மீர் மாநிலத்தில் அநாதைகளான நான்கு இந்துக் குழந்தைகளை ஒரு இஸ்லாமிய கிராமம் பராமரித்து வருகிறது.

காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு கிராமம் லியோடாரா.   இங்கு வசித்து வந்த இந்துக் குடும்பங்கள் இஸ்லாமியத் தீவிரவாதத் தாக்குதலால் அங்கிருந்து சென்று விட்டனர்.    அதில் ஒரே குடும்பம் மட்டும் தங்கள் சொந்த மன்ணை விட்டு செல்ல விரும்பாமல் அங்கேயே இருந்தனர்.   அந்தக் குடும்பத்தில் கணவன் ,மனைவி,  இரு மகள்கள், இரு மகன்கள் என ஆறு பேர் இருந்தனர்.    நோய்வாய்ப்பட்ட அந்தக் கணவர் ஒரு நாள் திடீரென மரணம் அடைந்து விட்டார்.

அதனால் அந்த இஸ்லாமிய கிராம மக்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான சர்தஜ் மாத்னியிடம் இறந்தவரின் மனைவிக்கு ஒரு வேலை வாங்கித் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.   ஜம்மு காஷ்மீர் முதல்வரான மெகபூபாவின் உறவினரான மாத்னி தனது சிபாரிசில் அந்தப் பெண்ணுக்கு வேலை ஒன்று வாங்கிக் கொடுத்துள்ளார்.   சமீபத்தில் அந்தப் பெண்ணும் மரணம் அடைந்து விட்டார்.   அந்த நான்கு குழந்தைகளும் தற்போது கவனிப்பாரின்றி வாடுகின்றனர்.

தற்போது இஸ்லாமியர்கள் மட்டுமே வசித்து வரும் அந்தக் கிராமத்தில் யாருமற்று தவிக்கும் இந்த நான்கு குழந்தைகளையும் வளர்க்க அனைவரும் முன் வந்துள்ளனர்.    நூற்றுக் கணக்கான இஸ்லாமியர்கள் கூடி அந்த இந்துப் பெண்ணின் இறுதிச் சடங்கை இந்து முறைப்படி நடத்தி வைத்துள்ளனர்.    அவர்களுக்கு தெரிந்த ஒரு இந்து புரோகிதரிடம் இறுதிச் சடங்கு எவ்வாறு நிகழ்த்த வேண்டும் என தொலைபேசி மூலம் விளக்கம் கேட்டு  அதன் படி நடத்தி உள்ளனர்.   அப்போது வெகு தொலைவில் இருந்து வந்த அந்தக் குடும்பத்தினரின் உறவினர்களும்  இந்து முறைப்படி தகனம் செய்வது எப்படி என்பதை விளக்கி உள்ளனர்.

அதன் பிறகு அந்த கிராமத்தில் உள்ள இஸ்லாமியர் அனைவரும் ஒன்று சேர்ந்து சுமார் 400 கிலோ அரிசியும், ரூ. 80000 பணமும் சேர்த்துள்ளனர்.   அந்தப் பணத்தில் ரூ. 55000 அந்தக் குழந்தைகளின் பெயரில் வங்கிக் கணக்கில் போடப் பட்டுள்ளது.   பாக்கி உள்ள பணத்தில் அவர்கள் வசித்து வந்த வீடு சீரமைத்து தரப் பட்டுள்ளது.

அந்த கிராமத்தில் வசிக்கும் முதியவரான அப்துல் ரஷித் “அந்தக் குழந்தைகளின் தந்தை இறக்கும் முன்பு எக்காரணத்தைக் கொண்டும் என் குடும்பம் இங்கிருந்து செல்லக் கூடாது.   இது எங்கள் ஊர்.    இவர்களைக் கவனிக்கவேண்டியது உங்கள் பொறுப்பு எனக் கூறி உள்ளார்.  அதனால் நாங்கள் என்றும் இந்தக் குழந்தைகளைக் காப்போம்” எனக் கூறி உள்ளார்.     இந்தக் குழந்தைகளின் அத்தையான ஜிகிரி என்பவர் இந்தக் குழந்தைகளை தன்னுடன் வருமாறு அழைத்தும் குழந்தைகள் வர மறுத்து விட்டனர்.   தங்கள் தந்தையின் விருப்பப் படி இதே கிராமத்தில் வசிப்பதாக கூறி விட்டனர்.