2004 ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர் இவர்கள் நான்கு பேரும் லஷ்கரி தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது.
இது போலி என்கவுண்டர் என்றும் அரசியல் ஆதாயத்திற்காக பாஜக அரசு நடத்திய ஏற்பாடு என்று இந்த என்கவுண்டரில் தொடர்புடைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து இந்த போலி என்கவுண்டர் குறித்து விசாரிக்க குஜராத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சதீஷ் சந்திர வர்மா நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த வர்மா 2016 ம் ஆண்டு இதுகுறித்து ஊடகங்களில் பேட்டி அளித்திருந்தார்.
வழக்கு விசாரணை முடியாமல் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இதுகுறித்து பேசியதற்காக வர்மாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் 2016 ம் ஆண்டு ஊடகங்களில் பேட்டி அளித்தது தொடர்பாக சதீஷ் சந்திர வர்மா டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக ஆகஸ்ட் 30 ம் தேதி இஸ்ரத் ஜஹான் என்கவுண்டர் வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்றத்தில் அரசு தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதியில் ஓய்வு பெற இருக்கும் நிலையில் வர்மா டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக அறிவித்துள்ளதை அடுத்து அவருக்கு ஓய்வூதியம் பணிக்கொடை எதுவும் வழங்கப்படாது என்று தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அரசின் இந்த முடிவை எதிர்த்து வர்மா உசச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் செப்டம்பர் 19 வரை அரசு தனது உத்தரவை செயல் படுத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் மோடி அரசு குறித்த ரகசியங்களை வெளியிடும் அதிகாரிகள் மீது பாஜக அரசு பழிவாங்கும் நடவடிக்கையை தொடர்ந்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.