அகமதாபாத்: உலக நாடுகளில் இருந்து குஜராத் துறைமுகத்திற்கு கப்பல்கள் மூலம் ஏராளமான போதைப்பொருட்கள் கடத்தி வருப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில், ரூ. 200 கோடி மதிப்பிலான 40 கிலோ போதைப்பொருளுடன் பாகிஸ்தான் நாட்டு படகு ஒன்று நேற்று இரவு  குஜராத் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் கடலோர பகுதியில் ரூ.200 கோடி மதிப்பிலான போதை பொருட்களுடன் வந்த பாகிஸ்தானிய படகு  கடலோர காவல்துறையினரால் விரட்டி பிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. வகுஜராத் பயங்கரவாத ஒழிப்பு படை மற்றும் இந்திய கடலோர காவல் படை இணைந்து ஜக்காவ் கடலோர பகுதியில் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு  ஜக்காவ் கடலோர பகுதியில் இருந்து, 33 நாட்டிக்கல் மைல்கள் தொலைவில் பாகிஸ்தானிய படகு ஒன்று இந்திய நீர்வழி பகுதிக்குள் வந்துகொண்டிருந்ததை  கடலோர காவல்துறையினர் கண்டனர்.  இதையடுத்து  இரண்டு அதிரடி விரைவு படகுகளில் துரத்தி சென்ற கடலோர காவல்படையின்ர, அந்த படகை, தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அந்த படகில் 40 கிலோ எடை கொண்ட ரூ.200 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் கடத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, பாகிஸ்தானிய படகையும், அதை ஓட்டி வந்த 6 பாகிஸ்தானியர்களையும் கைது செய்த கடற்படையினர் அவர்களை ஜக்காவ் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.  அங்கு தொடர்  விசாரணை நடந்து வருகிறது.