டெல்லி: ஈஷா விவகாரம் தொடர்பாக  உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசின் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று இரண்டு நாள் சோதனை நடத்திய நிலையில்,   தமிழக அரசின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை  விதித்துள்ளது.

ஈஷா குற்ற வழக்குகள் மீதான விசாரணை குறித்த உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை எதிர்த்து, சத்குரு ஜக்கி வாசுதேவ் மேல்முறையிட்ட நிலையில், தமிழகஅரசின்  விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


கோவை ஈசா மையத்தின் மீதான குற்றச்சாட்டுக்கள் மற்றும்  குற்ற வழக்குகள் மீதான விசாரணை குறித்த உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை எதிர்த்து, சத்குரு ஜக்கி வாசுதேவ் உச்ச நீதிமன்றத்தில் இன்று (அக்.3) மேல் முறையீடு செய்துள்ளார். மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, இன்றே இதை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதன்படி இன்று விசாரணை நடைபெற்றது.

இதற்கிடையில்,  கோவை ஈஷா யோகா மையம் மீதான குற்ற வழக்குகள் குறித்து விசாரித்து அக்டோபர் 4ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த நிலையில், ஈசா மையம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்கு மூத்த வழக்கறிஞர்  முகுல் ரோகத்கி ஆஜர் ஆனார் (இவர் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் செந்தில் பாலாஜி மற்றும் தமிழ்நாடு அரசுக்கு ஆதரவாக வாதாடியவர்).  அப்போது, இந்த  வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்கள் இருவரும் பொறியாளர்கள் எனவும் விருப்பப்பட்டே துறவறம் மேற்கொண்டதாகக் கூறினார். தேவையானால் ஆன்லைனில் ஆஜர் ஆகவும் அவர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் கூறும்போது, ’’இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும்’’ என்று கூறி இருந்தார்.

தொடர்ந்து இரு பெண்களும் ஆன்லைனில் ஆஜராகி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் பேசினர். அவர்கள், 8 ஆண்டுகளாக தந்தை தரப்பில் இருந்து துன்புறுத் தல் தொடர்வதாகக் கூறினர்.

இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

முன்னதாக,  கோவை வடவள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் காமராஜர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் தன்னுடைய மகள்களான கீதா மற்றும் லதா இருவரையும் மூளைச்சலவை செய்து ஈஷா யோகா மையத்தில் தங்க வைத்திருப்பதாகவும், அவர்களை மீட்டுத்தர வேண்டும் என்றும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த ஆட்கொணர்வு மனுவுடன் சேர்த்து, ஈஷா யோகா மையத்தின் மீதான பல குற்றச்சாட்டுக்களையும் அவர் முன்வைத்திருந்தார். இந்த வழக்கை செப்.30 அன்று விசாரித்த உயர் நீதிமன்றம், அவரின் இரண்டு மகள்களிடமும் நேரில் விசாரணை நடத்திய பிறகு, இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்த உத்தரவிட்டது. இந்த வழக்கில் விரிவான அறிக்கையை வரும் அக்டோபர் 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதை அடுத்து அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில் கோவை எஸ்பி, டிஎஸ்பி தலைமையிலான அதிகாரிகள், சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தற்போது தடை விதித்துள்ளது.

முன்னதாக,  உச்சநீதிமன்றத்தில் ஈஷா யோகா மையம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கில்,  ஈஷா யோகா மையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, இவை மதச் சுதந்திரம் தொடர்பான பிரச்சினை, இது மிகவும் அவசரமான மற்றும் தீவிரமான வழக்கு. சத்குரு மிகவும் மதிக்கப்படுபவர் மற்றும் லட்சக்கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்டவர் என்று உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார்.

தொடர்ந்து, ஈஷா மையத்தில் உள்ள ஓய்வுபெற்ற பேராசிரியரின் இரண்டு மகள்களுடனும் நீதிபதிகள் இணைய வழியாக விசாரணை மேற்கொண்டு, அவர்களின் கருத்துகளை பதிவு செய்தனர்.

இதையடுத்து, ஈஷா ஆசிரமத்தின் மருத்துவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்திருப்பது பற்றியும், பழங்குடி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு அளித்ததாக எழுந்துள்ள புகாருக்கும் ஈஷா மையத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்த வழக்கறிஞர், குற்றச்சாட்டுக்கு உள்ளான மருத்துவர் அங்கே தங்குபவர் அல்ல, நாள்தோறும் வந்து செல்பவர், மேலும், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பள்ளிக்கும் ஈஷா மையத்துக்கும் எவ்வித சம்மதமும் இல்லை எனத் தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற பேராசிரியரின் இரண்டு மகள்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் விருப்பத்தின் பேரில்தான் ஆசிரமத்தில் இருப்பதாகவும், சுதந்திரமாக இருப்பதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஈஷா மையத்தில் போலீஸ் விசாரணை நடத்த இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்துக்கு வழக்கின் விசாரணையை மாற்றியது.

மாநில காவல்துறை இதுவரை நடத்திய விசாரணையின் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்தக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.