சென்னை:
கோவையைச் சேர்ந்த சத்யவதி என்பவர் தனது மகள்களை ஈஷா யோகா மையத்தில் இருந்து மீட்டு தருமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
தங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலேயே தங்கியிருப்பதாக இரண்டு பெண்களும் கூறிவிட்டதை அடுத்து, தாய் சத்யஜோதி தாக்கல் செய்த மனு முடித்துவைக்கப்பட்டது.
ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகமுத்து மற்றும் பாரதிதாசன் அடங்கிய அமர்வு, கோவை மாவட்ட முதன்மை நீதிபதி ஈஷா மையத்திற்கு விஜயம் செய்து, அங்கிருப்பவர்களின் வாக்குமூலத்தைப் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டது.
இதையடுத்து கோவை மாவட்ட முதன்மை நீதிபதி பொங்கியப்பன்
மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரம்யாபாரதி ஆகியோர் ஈஷா யோகா மையம் சென்று விசாரணை நடத்தினார்கள். அங்கு தங்கியுள்ள கீதா, லதா என்ற இரண்டு பெண்களிடமும், ரமேஷ் என்பவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், அவர்கள் தெரிவித்த தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. மதியம் 3 மணி முதல் இரவு 7 மணி வரை 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
விசாரணைக்கு பிறகு பேட்டியளித்த லதா, கீதா ஆகியோர், “எங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலேயே நாங்கள் இங்கு தங்கி இருக்கிறோம். யாரும் எங்களை கட்டாயப்படுத்தவில்லலை, நாங்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ்கிறோம், எங்களிடம் நடந்த விசாரணையில் இதை தெளிவுபடுத்தி இருக்கிறோம் என்றனர்.
கோவை மாவட்ட முதன்மை நீதிபதி பொங்கியப்பன் நடத்திய விசாரணை அறிகை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணை நீதிபதி அறிக்கையை ஏற்றுக் கொண்ட ஐகோர்ட்டு நீதிபதி, பெண்களின் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டார்.
ஐகோர்ட்டு உத்தரவில், “மகள்கள் மனம் மாறினால் அழைத்துச் செல்லலாம், 18 வயது நிரம்பியவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. சன்னியாசம் அல்லது குடும்ப வாழ்க்கைக்கு செல்லுமாறு இருவரையும் கட்டாயப்படுத்த முடியாது” என்று தீர்ப்பில் நீதிபதி கூறி உள்ளார்.