வெலிங்டன்: நியூசிலாந்து உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில், 26 வயது சுழற்பந்து வீச்சாளர் இஷ் சோதி இடம்பெற்றுள்ளார். இவர் தற்போது ஐபிஎல் போட்டிகளில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
உலகக்கோப்பை போட்டிகள் குறித்து சோதி கூறியதாவது, “உலகக்கோப்பையில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். மார்டின் குப்தில், ராஸ் டெய்லர் மற்றும் கேன் வில்லியம்சன் போன்ற சிறந்த பேட்ஸ்மென்களோடு, நல்ல பந்துவீச்சாளர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இத்தொடரில், ஒவ்வொரு அணிக்குமே தமது முழுத் திறன்களை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். எங்களின் முக்கிய நோக்கம், முதலில் அரையிறுதிப் போட்டியை நோக்கி தெளிவாக முன்னேறுவதுதான்.
தொடக்கப் போட்டிகளில், இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளை எதிர்கொள்கிறோம். அந்த இரண்டு அணிகளுமே, எங்களின் திறன்களை சோதித்துக் கொள்வதற்கு நல்ல வாய்ப்பை வழங்கும் அணிகள்.
உலகக்கோப்பையை வெல்லும் நியூசிலாந்து அணியின் அங்கத்தினர்களுள் ஒருவனாக இருக்க வேண்டுமென்பது எனது ஆசை. மேலும், நடு ஓவர்களில் ஆக்ரோஷத்துடன் செயல்படும் பந்து வீச்சாளராகவும் இருக்க விரும்புகிறேன்” என்றார்.
– மதுரை மாயாண்டி