சென்னை: தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலையை பிரகடனம் செய்துவிட்டீர்களா? திமுக கூட்டணி கட்சியாக கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சமீப காலமாக திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை திமுக கூட்டணி கட்சிகளே விமர்சிக்கும் நிலை தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே திமுகவின் நம்பிக்கைக்கு உரிய கட்சியாக கருதப்படும் விசிக விமர்சித்து வந்த நிலையில், பின்னர் மற்றொரு கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சியும் விமர்சித்து வருகிறது. அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் நேரடியாகவே திமுக அரசை குற்றம் சாட்டி பேசினார். இதைத்தொடர்ந்து, சமீப நாட்களாக திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணனும் விமர்சனம் செய்து வருகிறார்.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதை பழக்கம், பாலியல் வன்கொடுமைகள், அரசை விமர்சிக்கும் எதிர்க்ட்சியினரை இரவோடு இரவாக கைது செய்வது போன்ற மாநிலஅரசின் நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில், திமுக ஆட்சிமீதான நம்பிக்கையை குறைத்து வருகிறது. இனால், திமுக கூட்டணி கட்சிகளும், திமுகமீது அதிருப்தியில் உள்ளனர். இதைத்தொடர்ந்து, திமுகவை நேரடியாக விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்.
அண்ணா பல்லைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர் திமுகவைச்சேர்ந்தவர் என்பது பல்வேறு ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், அவருக்கு துணையாக செயல்பட்ட நபரையும் (யார் அந்த சார்) கைது செய்ய வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
ஆனால், அரசை எதிர்த்து போராடும் கட்சிகளுக்கு காவல்துறை அனுமதி கொடுக்காமல், அவர்களை கைது செய்து வருகிறது. நேற்று பாஜக மகளிர் அணி சார்பில், மதுரை டூ சென்னை நீதி கேட்பு போராட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்ட நிலையில், காவல்துறை அறவழி போராட்டத்துக்கு அனுமதி மறுத்தது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. மேலும், போராட்டத்தில் பங்குபெற இருந்த பாக பெண்கள் அணி நிர்வாகிகளை, வீட்டை விட்டு வெளியேற முடியாதபடி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதும், இதுதான் திமுக அரசின் ஜனநாயகமா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர்.
இதை சுட்டிக்காட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார். தமிழகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பது ஏன்? விவசாயிகள் தொழிலாளர்களுக்கு எதிராக தி.மு.க அரசு செயல்பட்டால் போராடுவோம்” என்று எச்சரித்ததுடன், “தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலையை பிரகடனம் செய்துவிட்டீர்களா? என ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
ஏற்கனவே சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பான விஷயத்தில், திமுக அரசுக்கும், கம்யூனிஸ்டு தொழிற்சங்கத்திற்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்ட நிலையில், பின்னர் கூட்டணி தர்மத்துக்காக திமுக அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, போராட்டத்தை வாபஸ் பெற்ற நிலையில், சாம்சங் நிறுவனம், போராடிய தொழிலாளர்களை அடுத்தடுத்து பணி நீக்கம் செய்து வருகிறது. இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயல்படவில்லை என கம்யூனிஸ்டு தொழிற்சங்கத்தில் குற்றம் சாட்டி வரும் நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்திலும் அரசின் நடவடிக்கையை கம்யூனிஸ்டு கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
மாணவியின் எஃப்ஐஆர்-ஐ கசிய விட்ட தேசிய தகவல் மையம் மீது வழக்கு பதிய வேண்டும்! கே.பாலகிருஷ்ணன்
முன்னதாக, விழுப்புரம் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, டி.ரவீந்திரன் முன்னிலை வகித்தனர்.
இம் மாநாட்டில் பேசிய பிரகாஷ் கரத், மத்திய அரசு தனது தவறான கொள்கைகளை முன்னெடுக்கும் போது, திமுக அதை மக்களுக்கு எடுத்துக் காட்டும் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது. அதே நேரத்தில் தமிழகத்தில் சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் தொடங்குவதற்காக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் அடிப்படை உரிமைக்காக போராடினார்கள். இது இந்தியத் தொழிற்சங்கப் போராட்டத்தில் முத்திரைப் பதித்த போராட்டமாக இருந்தது.
தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய திமுக அரசு மறுத்து வருவது வேதனையாக உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சி செய்த ஜோதிபாசு, அமெரிக்காவில் தொழில் முதலீட்டை ஈர்க்கச் சென்ற போது மேற்கு வங்கத்துக்கு தொழிற்சாலைகளை அமைக்க வரலாம். அதேநேரத்தில் தொழிலாளர் நலச்சட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்போம் என்று நிபந்தனை அளித்து அதை செயல்படுத்தி வந்தார். அது மிகச் சிறந்த மாடல். அதுபோன்று திமுக அரசும் இருக்கவேண்டும் என்றார்.
பின்னர் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் , அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை நிகழ்வை அரசியல் செய்ய பாஜக நினைக்கிறது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக மட்டுமல்ல, நாட்டின் எந்த பகுதியிலும்பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழும் போது அதற்கு எதிராகப் போராடும் இயக்கமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருந்து வருகிறது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை நிகழ்வை அரசியலாக்கும் செயலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஈடுபடுகிறார். ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த போது, அரசை எதிர்த்து போராடினாரா?, அப்போது எங்கே சென்றிருந்தார் அவர். தமிழகத்தில் பா.ஜ.க.-வின் முயற்சிகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.-வின் முயற்சி தமிழகத்தில் ஒருபோதும் வெற்றி பெறாது.
ஒரு கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்த போது அந்த கட்சியின் நிறுவனர், இது நான் உருவாக்கிய கட்சி. இங்கே நான் சொல்வதை தான் எல்லோரும் கேட்க வேண்டும். அப்படி கேட்கவில்லை என்றால் அவர்கள் இந்த அரங்கத்தை விட்டு வெளியே போய்விடலாம் என்று பேசுகிறார். ஆனால், மார்க்சிஸ்ட் கட்சி என்பது யாரோ ஒருவருக்கு சொந்தமான கட்சி அல்ல. லட்சக்கணக்கான உழைப்பாளர்கள் தங்கள் உதிரத்தை சிந்தி வளர்த்திருக்கிற கட்சி.
ஒரு ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் என்று சொன்னால் காவல்துறை வழக்கு போடுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் கேட்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடில்லாமல் செயல்படுகிறது.
போராட்டத்தை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் என்ன? ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால் அதற்கு அனுமதியை ரத்து செய்து, கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா?
சீப்பை ஒளித்துவிடுவதனால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா? எனவே, இப்படிப்பட்ட போக்கை காவல்துறை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.
பாஜக- ஆர்எஸ்எஸுக்கு எதிராக, பாசிச ஆட்சிக்கு எதிராக திமுகவுடன் இணைந்து நாங்கள் போராடி வருகிறோம். இந்தியா கூட்டணியில் இணைந்து பயணிக்கிறோம். அதே நேரத்தில் தமிழகத்தில் பட்டா கேட்டு போராடினால், தொழிலாளர்கள் உரிமைக்காக போராடினால் உடனடியாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்கின்றனர்.
விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு பேரணிக்கு அனுமதி மறுத்து, கடைசி நேரத்தில் அனுமதி தந்தீர்கள். பின்னர் கட்சியின் நிர்வாகிகளை அழைத்து பேரணிக்கு அனுமதியில்லை எனக் கூறுவது ஏன்?. எதிர்க்கட்சியாக இருந்தாலும் எல்லா கட்சிகளும் நடத்துகிற போராட்டங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும். ஏன் அஞ்சுகிறீர்கள்? இந்த நிலை மாற வேண்டும். தமிழகத்தில் பல்வேறு மாடல்கள் இருந்தாலும் இடதுசாரிகள் மாடல்தான் சிறந்தது.” என்றார்.
இப்பொதுக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், கட்சியின் மூத்த தலைவர் சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக மாவட்டச் செயற்குழு உறுப்பின பி.குமார் வரவேற்றார். நிறைவில், விழுப்புரம் வட்டச் செயலர் ஆர்.கண்ணப்பன் நன்றி கூறினார்.
மாலையில் மாநாடு நடைபெற்ற பகுதியில் தொடங்கிய பேரணி காட்பாடி மேம்பாலம், நகராட்சிப்பகுதி, மருத்துவமனை வீதி, நான்குமுனை சந்திப்பு, ஆட்சியரகப் பகுதி, புதிய பேருந்து நிலையம்வழியாக நகராட்சித் திடல் பகுதியை அடைந்தது. இந்த பேரணியை பிரகாஷ் காரத், பிருந்தாகாரத் உள்ளிட்ட தலைவர்கள் பார்வையிட்டனர். பேரணிக்கு கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், அதையும் மீறி பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் யார் அந்த சார் என்று எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவனும் கேள்வியை முன்வைக்க, தற்போது மற்றொரு கூட்டணி கட்சியான சி.பி.எம். கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் முதலமைச்சரை கேள்வி கணைககளால் துளைத்திருப்பது தி.மு.க. கூட்டணிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.